சூ. 312 : | மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே |
| ஒல்வழி யறிதல் வழக்கத் தான |
| (17) |
க - து: | ஒருசார் சொற்கள் மெல்லெழுத்தொடு உறழ்ந்து முடியுமென்கின்றது. |
|
பொருள் :மகர ஈற்றுள் மெல்லெழுத்தொடு உறழ்ந்து நிற்கும் சொற்களும் உள, வழக்கின்கண் அவ்வாறு இயலுமிடமறிந்து கொள்க. என்றது; எல்லாச் சொற்களும் உறழாஒல்லுவனவே உறழும் என்றவாறு. |
எ. டு :குளங்கரை - குளக்கரை, குளஞ்சேறு - குளச்சேறு எனவும் வலங்கை - வலக்கை, வலஞ்செவி - வலச்செவி எனவும் வரும். இனி உறழாதன வருமாறு: குளத்தாமரை, குளக்கொட்டி, இடச்செவி எனவும் வலந்தலை, பரங்குன்று எனவும் வரும். |
உருபு புணர்ச்சிக் கோதியவை ஒல்லும் வகையாற் பொருட்புணர்ச்சிக்கும் வருமாகலான் அத்துச் சாரியை பெற்றுக் குளத்துக் கொண்டான், ஈழத்துச் சென்றான் எனவும் வருமென்க. |
ஆசிரியர் முன்னும் பின்னும் ‘‘ஒல்வழி’’ என்றே கூறியுள்ளமையான், ஈண்டுச் ‘செல்வழி’ என்பது பாடமாகாமையும் அதற்குப் பொருட் சிறப்பின்மையும் நோக்கியறிக. |
‘புலம்புக்கனனே’, ‘கலம்பெறுகண்ணுளர்’ என்பவை மகரங்கெடாது வந்தன என்பார் உரையாளர். இவை மகரங்கெட்டு வருமொழிக்கேற்ற மெல்லெழுத்துமிக்கன என்றதே இலக்கண நெறியாதலின் அவர் கூற்று ஒவ்வாதென்க. |