|
சூ. 314 : | அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும் | (19) | | க-து: | மகர ஈற்று அல்வழிப்புணர்ச்சியாமாறு கூறுகின்றது. | | பொருள் :மகர ஈற்றுச் சொற்கள் எல்லாம் அல்வழிப் புணர்ச்சிக்கண் மெல்லெழுத்தாகும். | ‘மெல்லெழுத்தாகும்’ என்றதனான் வருமொழி வல்லெழுத்து என்பது பெறப்படும். வல்லெழுத்துவரின் திரியுமெனவே ஏனைக் கணங்கள்வரின் மேல் வேற்றுமைக்கு ஓதிய விதிகளுள் ஏற்பன பெற்றுப்புணரும் என்பது உய்த்துணரப்படும். | ‘‘அல்வழி யெல்லாம்’’ என்றதனான் தொகையின் கண்ணும், தொடரின் கண்ணும், ஈறுகெட்டு விதியீறாக நிற்ப, வரும் வல்லெழுத்து மிகுதலும், இடையெழுத்து வரக் கெடாது இயல்பாதலும், உயிர்வர உடம்படுமெய் பெற்றுப் புணர்தலும் பிறவுமெல்லாம் கொள்ளப்படும். | எ. டு:மரங்குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்; மர நீண்டது, அகரமுதல் எனவும்; மரம்யாது, மரம்வலிது எனவும்; கொல்லும்யானை, ஆய்தவெழுத்து எனவும்; வட்டத்தகடு, நீலக்கண், ஆய்தப்புள்ளி எனவும் வரும். |
|