சூ. 315 :

அகமென் கிளவிக்குக் கைம்முன் வரினே

முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும்

வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க

மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான 

(20)
 

க-து:

அகம் என்னும் சொல் கை  என்பதனொடு புணருங்கால் எய்தும்
நிலை மொழித் திரிபு கூறுகின்றது.
 

பொருள் :அகம்  என்னும் சொல் முன்னர்க் கை என்னும் சொல்வரின்
முதற்கண் நிற்கும் அகரம் தான் கெடுதலினின்று ஒழிய அதற்கு முன்னின்ற
ககர  உயிர்  மெய்யும்  மகர  ஒற்றும்  கெடுதலும்  ஆசிரியர்க்கு  நீக்கும்
நிலைமைத்தின்று, அவ்விடத்துக், கை என்பதற்குரிய மெல்லெழுத்துமிகும்.
 

எ. டு:அகம்+கை = அங்கை  எனவரும். பொதுவிதியான் மகரம் கெட்டு
நிற்பவும்  முன்னவை  என  அதனையும்  அடக்கிக்கேடு  கூறினமையான்
அகஞ்சிறை எனற்பாலது அஞ்சிறை என வருதலும் கொள்க.
 

அகஞ்செவி  என்பது  அஞ்செவி  என  வருதலும்  கொள்க  என்பார்
உரையாசிரியர்.  அகச்செவி  என்பதே  மரபாகலானும்  அஞ்செவி என்பது
அழகிய  செவி  என்னும்   பொருள்படுமாகலானும்  அதனை   மிகையுள்
அடக்குதல்   வேண்டா  என்க.   அகத்ததாகிய  செவி எனின், அதனைப்
புறனடையாற் கொள்க.