சூ. 316 : | இலமென் கிளவிக்குப் படுவரு காலை |
| நிலையலும் உரித்தே செய்யு ளான |
(21) |
க-து : | ‘இலம்பாடு’ என்னும் உரிச்சொல் ஈறு (விகுதி) கெட்டு ஒரோவழிப் ‘படு’ என்னும் தொழிற் சொல்லொடு புணரும் செய்யுள் மரபு கூறுகின்றது. |
|
பொருள் :வறுமை என்னும் பொருளினதாகிய ஈறுகெட்ட ‘இலம்’ என்னும் உரிச்சொற்குமுன் படு என்னும் முதனிலைத் தொழிற்சொல் வருமிடத்துச், செய்யுள் வழக்கின்கண் பொதுவிதியான் மகர ஒற்றுக் கெடாது நிலைபெறுதலும் உரித்தாகும். உம்மையாற் பகரமாகத் திரியாமையும் உரித்து என்றவாறாம். |
இலம் என்பது இன்மை என்னும் பெயர்பொருட்டாய் நின்றது. இலம் என்னும் தன்மைப் பன்மைக் குறிப்புவினைமுற்றுச் சொல்வேறு இதுவேறு என அறிக. |
எ.டு :‘‘இலம்படுபுலவர் மண்டை’’ (புறம் - 155) ‘‘இலம்படுபுலவர் ஏற்றகைந் நிறைய’’ (மலைபடு-576) எனவரும். |
‘‘வலம்படுவாய்வாள்’’ என்றவிடத்தும் மகரம் கெடாது நின்றதால் எனின்? ஆண்டஃது பெயர்ச் சொல்லாதலின் பொதுவிதியுள் அடங்கும். |
ஈண்டு ஓதப்பெற்ற இலம் என்னும் சொல் ‘இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை’ (உரி - 62) எனப்பட்ட உரிச்சொல்லின் கடைக்குறையாகும். இச்சொல் புலப்பாடு, வாய்பாடு, கடப்பாடு என்பவற்றைப் போல, விகுதியோடு கூடி நின்றல்லது பொருளுணர்த்தற்கு ஏலாது எனினும், நல்லிசைப் புலவோர் ‘இலம்பாடு’ என்னும் சொற்குரிய வறுமை என்னும் பொருளில் பாடு என்னும் இறுதி நிலையின்றி ‘இலம்’ என்னும் முதனிலையை மட்டும் கொண்டு செய்யுளின்கண் ஆளுதலை நோக்கி, ஆசிரியர் அதனை நிறுத்த சொல்லாக வைத்து இவ்விதி கூறினாராவார். |
மற்றும் இவ்உரிச்சொல்லுக்குப் படு என்னும் தொழிற் சொல்லே வருமொழியாக வருதலைக் கண்டு ஏனைய மகர ஈற்றுப் பெயர்ச் சொற்களைப் போலக் கெட்டுநின்று பகரமாகிய வல்லெழுத்து வர அதற்குரிய மகர ஒற்று மிக்கதோ, நிலைமொழி மகரம் கெடாது நின்றதோ என்னும் ஐயம் நீங்க மகரம் கெடாது நிற்கும் என்பார் ‘‘நிலையலும் உரித்தே’’ என்றார். |
மகரஈறு அல்வழிக்கண்ணும் துவரக்கெடும் (சூ-310) என்பது அல்வழி யெல்லாம் (சூ - 314) என்னும் சூத்திரத்துள் ‘எல்லாம்’ என்பதனாற் கொள்ளப்பட்டதாகலின் அவ்விதி இதற்கு எய்தாமைப் பொருட்டு நிலையலும் உரித்தே என்றார். அவ்எச்ச உம்மையான் வல்லெழுத்து மிகாமையும் கொள்ள வைத்தார். |
“இலம்பாடு” என்பது ஒரு மொழியாக நிற்கும் உரிச்சொல். பாடு என்பது விகுதி. இலம்படு என்பது இலம்+படு எனப்புணர்ந்து நிற்கும் இரண்டு சொல். படு என்பது முதனிலைத் தொழிற்சொல். படுதல் என்பது உண்டாதல், தோன்றுதல், உறுதல், அடைதல், மறைதல், கெடுதல் எனப் பொருள் தரும் பல பொருளொருசொல். |
இலம்படு புலவர் என்பதற்கு வறுமைப்பட்ட அல்லது வறுமைப்படும் புலவர் என்பது பொருள். இதனைப் புறநானூற்றுப் பழைய உரையாசிரியர் (புறம்-155) உரையான் அறிக. படுபுலவர் என்பது வினைத்தொகை. |
இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இலம்படு புலவர் என்னும் தொடருக்குப் பொருள் காண்பதில் முரண்பட்டு நின்றனரேயன்றி இப்புணர்ச்சி விதி கூறியதன் நோக்கம் பற்றியோ, இச்சொல்லின் அமைதி பற்றியோ ஓர்ந்துரைத்தாரல்லர். |
இலம்படு என்பது இன்மையானது உற்ற என அல்வழியாயும் இன்மையை உற்ற என வேற்றுமையாயும் பொருள் விரிதலின் இடம் நோக்கிப் பொருள் கொள்க. |