சூ. 317 :

அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி

ஒத்த எண்ணு முன்வரு காலை

(22)
 

க-து :

மகர ஈற்று எண்ணுப் பெயர்க்காவதொருவிதி கூறுகின்றது
 

பொருள் :ஆயிரம்  என்னும்  சொல்லின்  இறுதி,  இயைவதற்கொத்த
எண்ணுப்பெயர் வருமிடத்து அத்துச்சாரியையொடு பொருந்திப் புணரும்.
 

எ.டு: ஆயிரத்தொன்று   -   ஆயிரத்துமூன்று  -   ஆயிரத்துப்பத்து,
ஆயிரத்துநூறு எனவரும். இவை உம்மைத் தொகை.
 

அத்துச்சாரியை   பெறுதற்கு     ஒவ்வாத   எண்ணுப்பெயர்   வரின்
ஆயிரங்கோடி, ஆயிரமாயிரம் எனப் பொதுவிதி பெறும் என்க. மகர ஈற்று
எண்ணுப்பெயர் இஃதொன்றேயாதலின் விதந்து கூறினார்.
 

நச்சினார்க்கினியர்   ஆயிரத்துக்குறை - கூறு   என்பவற்றை  ஈண்டே
இலேசினான்   முடித்துக்   கொள்க  என்பார்.  ஆசிரியர் வருமொழியை
விதந்து கூறியுள்ளமையான் அவர் கருத்து ஒவ்வாதென்க. ஆயிரத்துக்குறை
என்பது ஆயிரமும் அதனுடைய குறையும் எனப் பொருள்தருதலின் அஃது
வேற்றுமை முடிபாய் அத்துச்சாரியை பெற்றது என்க.