சூ. 318 :அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே(23)
 
க-து:இதுவுமது.
 

பொருள் :மேற்கூறிய ஆயிரம் என்னும் சொல் பிறஎண்ணுப் பெயரை
அடுத்துப் பொருள் வேறுபட்டு நிற்பினும் மேற்கூறிய அத்தன்மைத்தேயாம்.
அஃதாவது அத்துச்சாரியை பெற்றுப் புணரும் என்றவாறு.
 

எ.டு:    பதினாயிரத்தொன்று,              இருபதினாயிரத்துமூன்று,
எண்பதினாயிரத்துப்பத்து    எனவரும்.     ஏனையவற்றொடும்   கூட்டிக்
கண்டுகொள்க.
 

மற்றிஃது “அடையொடு தோன்றினும் புணர்நிலைக்குரிய” (புணரியல்-8)
என்பதனான்  அடங்காதோ  எனின்?  அடங்காது. என்னை? செந்தாமரை,
கருங்குவளை,   பெருஞ்சாத்தன்    எனப்பிற   பெயர்கள்  அடையடுத்து
வருங்கால்  அடையடுத்த  பெயர்ப்பொருள் திரிபுறாமல் நிற்கும். எண்ணுப்
பெயர் அடையடுத்து வரின் பொருள் வேறாகி நிற்கும். ஆதலின் என்க.
 

எனவே  பொருள் வேறுபடினும் சொல்வடிவம் வேறுபடாமல் அவ்விதி
எய்துதல்  சிறப்பு  நோக்கி  விதந்து  கூறினார்  என்க. ஓராயிரத்தொன்று
என்பது  பொருள் வேறுபட்டிலதாயினும் இனஞ்சுட்டி நிற்றலின் ஓராற்றான்
வேறுபட்டதேயாமென்க.