சூ. 320 :

படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்

தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்

வேற்றுமை யாயின் உருபியல் நிலையும்

மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான 

(25)
 

க-து : 

ஒருசார்   மகர  ஈற்றுப்  பெயர்களின்  வேற்றுமைப்  புணர்ச்சி
கூறுகின்றது.
 

பொருள் :எல்லாரும்   என்னும்   படர்க்கைப்  பெயரும்,  எல்லீரும்
என்னும்  முன்னிலைப்  பெயரும்,  நெடுமுதல்  குறுகும்  இயல்பினவாகிய
பெயர்நிலைச்  சொற்களும்,  வேற்றுமைப்  பொருட்புணர்ச்சியாயின், உருபு
புணர்ச்சிக்கு ஓதிய  இயல்பினைப் பெற்று நிற்கும்; அவ்வாறு  நிற்குமிடத்து
(பொதுவிதியான் மகரம் கெட) மெல்லெழுத்துமிகும்.
 

உருபியலுள் “எல்லாரும்  என்னும்  படர்க்கை  இறுதியும்”  (உருபு-19)
எனவும்,  “தாம்நாம்  என்னும்  மகர   இறுதியும்”  (உருபு - 16)  எனவும்
விதந்து   கூறியதனான்   ஈண்டு   வாளாகூறினார்   என்க.   தொடக்கங்
குறுகிநிற்கும் சாரியையும் உளவாகலின் பெயர் நிலைக்கிளவி என்றார்.
 

உருபியல்   நிலையுமாறாவது:   படர்க்கைப்  பெயர் ஒற்றும் உகரமும்
கெட்டு ரகரப்புள்ளி நிற்கத் தம்முச்சாரியை பெற்று  வருமொழி இறுதிக்கண்
உம்முப்  பெறுதலும், முன்னிலைப்  பெயரும்  அவ்வாறே நும்முச்சாரியை
பெற்று  இறுதிக்கண்  உம்முப்பெறுதலும்,  தொடக்கங்குறுகும் பெயர்களுள்
தாம், நாம்  என்பவை தம், நம்  எனக்குறுகி  நிற்றலும், யாம் என்பது எம்
எனத் திரிந்து குறுகி நிற்றலுமாகும்.
 

எ. டு:எல்லாரும்  +  கை =  எல்லார்தங்கையும்,  செவியும், தலையும்,
புறமும் எனவும்; எல்லீரும் + கை = எல்லீர்நுங்கையும், செவியும், தலையும்,
புறமும் எனவும்;  தங்கை,  நுங்கை,  எங்கை,  செவி, தலை, புறம் எனவும்
வரும்.
 

ஆவயினான என்றதனான் ஏனைக்கணங்கள்வரின்  வேற்றுமைக்கோதிய
பொதுவிதியான்  வருமெனக்  கொள்க. எ.டு: எல்லார் தஞ்ஞாணும், நூலும்,
மணியும்,  யாழும்,  வட்டும்,  அழகும்,   ஆடையும்   எனவரும்.  எல்லீர்
நுஞ்ஞாணும்,  நூலும், மணியும்  என  ஏனையவற்றொடும் ஒட்டிக் கொள்க.
தம்,  நம்,  எம்   என்பனவற்றின்முன்   உயிர்வரின்  ஒற்று   இரட்டுதல்
தொகைமரபினுள் கூறப்பட்டது.