சூ. 321 :அல்லது கிளப்பின் இயற்கை யாகும்(26)
 

க-து:

மேற்கூறிய பெயர்கட்கு அல்வழி முடிபு கூறுகின்றது.
 

பொருள் :மேற்கூறப்பெற்ற     பெயர்கட்கு      அல்வழிப்புணர்ச்சி
கூறுமிடத்து அவை திரிபின்றி இயல்பாகப் புணரும்.
 

எ. டு:எல்லாருங்குறியர்,   சிறியர்,    தீயர்,    பெரியர்    எனவும்,
எல்லீருங்குறியீர்,   சிறியீர்,  தீயீர்,  பெரியீர் எனவும், தாங்குறியர், சிறியர்,
தீயர், பெரியர் எனவும் (இவை உயர்திணை) தாங்குறிய, சிறிய, தீய, பெரிய
எனவும்  (இவை அஃறிணை) நாங்குறியேம்,  சிறியேம், தீயேம், பெரியேம்
எனவும், யாங்குறியம், சிறியம், தீயம், பெரியம் எனவும் வரும்.
 

ஏனைக்கணங்கள்  வரின்  மேல்  ‘‘அல்வழி  யெல்லாம்’’ (புள்ளி - 19)
என்னும் சூத்திரத்து இலேசினாற் கொண்டவிதிகளைப் பெற்று முடியும்.