சூ. 322 :

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

எல்லாம் எனும்பெயர் உருபியல் நிலையும்

வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது 

(27)
 

க-து:

எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணையாக நின்று
இருவழியும் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:எல்லாம் என்னும் பொதுப்பெயர்  அஃறிணைப் பொருட்கண்
வருங்கால்     அல்வழியிற்   கூறினும்    வேற்றுமைவழியிற்    கூறினும்
உருபுபுணர்ச்சிக்கு   ஓதிய   இயல்பிற்றாய்   நிற்கும்.  வேற்றுமையல்லாத
வழிச்சாரியை நிலைபெறாது.
 

எனவே,  வேற்றுமையாயின்  (வற்றுச்)   சாரியை   வருமென்பதாயிற்று.
உயர்திணைவிதி  மேல்  விதந்து  கூறப்படுதலின்   இஃது  அஃறிணைக்கு
என்பது  பெறப்படும்.  உருபியல் நிலைதலாவது, வற்றுச்சாரியை பெறுதலும்
இறுதிக்கண் உம்முப் பெறுதலுமாம்.
 

எ.டு :எல்லாக்குறியவும்,    சிறியவும்,   தீயவும்,   பெரியவும்   என
அல்வழிக்கண் சாரியை இன்றிப் புணர்ந்தது. மகரம் பொதுவிதியாற் கெட்டு,
வல்லெழுத்து  மிக்கது   என்க. எல்லாவற்றுக்கோடும்,  செவியும், தலையும்,
புறமும்  என  வேற்றுமைக்கண்  வற்றும்  இறுதிக்கண்  உம்மும்  பெற்று
முடிந்தது.
 

அடுத்த நூற்பா ‘‘மெல்லெழுத்து மிகினும் மான மில்லை’’ எனவருதலின்
ஈண்டு வல்லெழுத்து மிகுதல் உய்த்துணரப்பட்டது. (இவ்வாறு விதிபெறப்பட
வைப்பது    இவ்வாசிரியரியல்பென    அறிக)    பிறகணங்கள்    வரின்
மேற்கூறியாங்குக் கொள்க.
 

எ.டு :எல்லாநாளும், மணியும், யாழும், வாயிலும், அவிலும் எனவரும்.