சூ. 325 :நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே(30)
 

க-து:

மகர ஈற்று முன்னிலைப் பன்மைப்பெயர் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :சாரியை  அல்லாத,  நும்  என்னும்  பெயர் மெல்லெழுத்து
மிக்குப் புணரும்.
 

எ. டு:நுங்கை,  நுஞ்செவி,  நுந்தலை,  நும்புறம்  எனவரும்.  ஏனைக்
கணங்கள்வரின் மேலானவற்றொடு ஒக்கும்.
 

நும்  எனும்  பெயர்  என்னாது,  ஒருபெயர்  என்றதன்  கருத்தாவது:-
மொழிகளின் தோற்றத்திற்கு அடிப்படை, மாந்தரின்  உணர்ச்சியாம் என்பது
மொழியாய்வாளர்     முடிபாகும்.     தமிழ்மொழிக்கண்    மூவிடங்களை
உணர்த்திவரும் அடிப்படை எழுத்துக்கள்;  உயிருள் அ,இ,உ என்பவையும்,
ஒற்றுள் த,ஞ,ந என்பவையுமாம்.
 

அவற்றுள்      படர்க்கைக்குரியவாக    அ,    த      என்பவையும்
முன்னிலைக்குரியவாக   உ,  ந  என்பவையும்  தன்மைக்குரியவாக  இ, ஞ
என்பவையும் அமைந்துள்ளமை காணலாம்.
 

இவற்றினின்றே   சுட்டுப்   பெயர்களும்,   கிளைநுதற்   பெயர்களும்,
இடங்காட்டும்  விகுதிகளும்  அமைந்துள்ளன  என்பதை அ, இ, உ, ஆன்,
ஈன், ஊன், அன், இன், உன் என வருதலான் காணலாம்.
 

அங்ஙனம்   தன்மைக்குரியவாக   நின்ற  இ, ஞ   என்பவை    ஒலி
ஒற்றுமையுடைய எகரமாகவும் யகரமாகவும் திரிந்தமைந்தன.
 

அம்மரபானே தாம், தம், தான், தன்  எனப்படர்க்கையும், ஞேம், ஞெம்,
(யேம், யெம்) ஏம், எம் (யேன், யென்) ஏன், என்  எனத் தன்மையும்; நூம்,
நும்,  நூன்,  நுன்,  உம், உன்  என  முன்னிலையும்   அமைந்துள்ளமை
புலனாகும்.
 

தன்மைக்குரிய   இகரம்  உலகவழக்கின்கண்   முன்னிலையிடத்ததாய்ப்
பிறழ்ந்த  போது  நூம், நும்; நூன், நுன்  என்பவை  நீம், நிம்;  நீன், நின்
எனத்  திரிபுற்றன.  எனினும்  முன்னிலைக்குரிய  உகர ஒலியின் நினைவும்
மாறாமல் நீமு, நீனு எனப் பரவை வழக்கில் வழங்குவனவாயின.
 

இனி, மொழிக்கூறுகளை  ஆய்ந்து  செம்மை செய்து இலக்கணவழக்காக
அமைத்த காலத்துப்  படர்க்கைப் பெயருள் திரிபு நேராமையான் அவற்றை
அவ்வாறே அமைத்துக் கொண்டு, தன்மை, முன்னிலைச் சொற்களை மட்டும்
இயல்நூலார் ஒரு மரபிற்கு உட்படுத்தியுள்ளனர்.
 

அங்ஙனம்  நியமிக்குங்கால்  யாம்,  யான்;  எம்,  என்  என்பவற்றைத்
தன்மைக்கும்  நூம், நும்;  நூன், நுன்;  உன் என்பவற்றை முன்னிலைக்கும்
அமைக்கப்பட்ட   நிலையில்,  சேரி  வழக்கில்   இகரம்  முன்னிலைக்கண்
வழங்குதலை நோக்கி  நீயிர், நின் என்பவற்றையும் முன்னிலைப் பெயராகக்
கொள்வாராயினர்.
 

தொல்காப்பியம்  தோன்றுதற்குப்  பன்னூறாண்டுகட்கு  முன்னரே தமிழ்
இலக்கணம்  செய்யத்  தொடங்கிய சான்றோர் இலக்கணக் குறியீடாகச் சில
சொற்களைச்   செந்தமிழ்படுத்திய  போது  முன்னிலை  ஒருமைக்கண்  நீ
என்பதை  எழுவாய்க்கும்  நின்  என்பதை  வேற்றுமைக்கும், பன்மைக்கண்
நீயிர்  (நீஇர்) என்பதை  எழுவாய்க்கும்  நும்  என்பதை  வேற்றுமைக்கும்,
இலக்கணக்  குறியீடாக  நியமித்துள்ளனர்.  அந்நெறி பற்றியே யான், யாம்
என்பவை    எழுவாய்க்கும்  என்,  எம்     என்பவை   வேற்றுமைக்கும்
அமைவனவாயின. எனினும்  நீயிர் - நும் என்பனவற்றுள் எது மூலச்சொல்
என்பதை  உணரும்  வகையில்  நும்  என்பதற்குச்  சிறப்புக்   கொடுத்து
இலக்கணங்  கூறலாயினர். அம்மரபினை  நன்குணர்ந்த தொல்காப்பியனார்
நீயிர்  என்பது நும்  என்பதன்  திரிபே  என்பது  புலப்பட  அது திரிந்த
நெறியை    இவ்வதிகாரத்துள்   (சூ - 326)    எடுத்துக்கூறி,    அதனை
வலியுறுத்துவாராய்ச்   சொல்லதிகாரத்தும்  ‘நும்மின்  திரிபெயர்’   என்று
ஓதினார்.   ஆதலின்   முன்னிலைப்  பெயர்  எனற்குரியது நும் என்பதே
என்பது  தோன்ற  ‘‘நும்மென்  ஒருபெயர்’’  என்றார்.  பிற விளக்கங்களை
எனது மூவிடப் பெயர் ஆய்வுரையுள் கண்டு கொள்க.