பொருள் : நும் என்னும் மகர ஈற்று முன்னிலைப்பன்மைப் பெயர் அல்வழியிற் சொல்லுமிடத்து உகரம் கெடும். உகரம் கெட நின்ற நகரமெய்யின் மேல் ஈகாரம் ஊர்ந்து நீ என நிற்க, இடையே ஓர் இகரம் நிலைபெற்று, முன்னின்ற மகர ஒற்றுக் கெட ரகரப் புள்ளியொடு புணர்ந்து நிற்றல் வேண்டும். அங்ஙனம் விதியீறாகக் கூறப்பட்ட மொழியிடத்து வருமொழி இயல்பாகப் புணரும். சொல்லுங்காலை உக்கெட ஈவர இ இடை நிலைபெற்று ரகரப் புள்ளியொடு புணர்ந்து நிற்றல் வேண்டும் எனக் கூட்டி முடிக்க. |
எ. டு: (நும் - நீம் - நீஇர்) நீஇர் என்பது, வழக்காறு காரணமாக உடம்படுமெய் பெற்று நீயிர் எனவரும். நீர் என்பது இடைக்கால வழக்கு. (நீயிர்) நீஇர் கண்டீர், சென்றீர், தின்றீர், பெரியீர் எனவும் ஞான்றீர், நீண்டீர், மாண்டீர், யாத்தீர், வந்தீர், அடைந்தீர் எனவும் வரும். |