மகர ஈற்றுத் தொழிற்பெயர்க்கு மாட்டேற்று வகையான் விதி கூறுகின்றது.
பொருள் :மகரஈற்றுத் தொழிற்பெயர் எல்லாம் ஞகரஈற்றுத் தொழிற் பெயரியல்பினவாம். அஃதாவது உகரம் பெற்று வல்லெழுத்து வரின் மிக்கும் ஞநம வரின் இயல்பாயும் புணரும் என்றவாறு.
எ. டு:திருமுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் நிமிர்ந்தது, நன்று, மறந்தது எனவும் வரும். கும், தும், வெம் என மகர ஈற்றுத் தொழிற்பெயர் பலவாதலின் எல்லாம் என்றார்.
எல்லாம் என்றதனான் நாட்டம், ஆட்டம் என்பன உகரம் பெறாது வந்தன என்பார் உரையாசிரியர். அவை நாடு, ஆடு என்னும் குற்றுகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் அம்விகுதி பெற்று நின்றனவாதலின் பொருந்தாதென்க.