க-து:
பொருள் :மகர ஈறு வருமொழி வகரம் வந்தியையின் தனது மாத்திரைகுறுகிப்புணரும்.
எ. டு:நிலம்வலிது, வலம்வந்தான், புலம்வேண்டினான் எனவரும்.நிலவலிமை, வலவாழ்வு என்பவை பொதுவிதியாற் கெட்டு நின்றன எனஅறிக.
இதழ்வழி உருப்பெறும் மகரம் மூக்கொலியாதலின் இதழ்வழி உருப்பெற்று மிடற்றிசையான் ஒலிக்கும் வகரம் வரக் குறுகலாயிற்று.உரையாசிரியன்மார் ‘வகார மிசையும் மகாரங் குறுகும்’ எனப் பாடமோதுவர். அது பாடமாயின் மகரக்குறுக்கம் வருமிடம்கூறியதாகுமேயன்றி மகரங் குறுகுதற்குக் காரணம் கூறியதாகாது.இடங்கூறுதலே ஆசிரியர் கருத்தாயின் இந்நூற்பா, மொழிமரபின்கண்இருத்தல் வேண்டும். புணர்ச்சி வகையான் எய்தும் மகரத்தின் திரிபுகூறுதலே ஆசிரியர் கருத்தாதலின் அது பாடமன்மை புலனாம்.