சூ. 331 : | நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன |
| அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே |
| ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர் |
(36) |
க-து: | மகர ஈற்று நாட்பெயர்க்கு ஆவதோரிலக்கணங் கூறுகின்றது. |
|
பொருள் : மகர ஈற்று நாட்பெயர்ச் சொற்கள், மேல் இகர ஈற்று நாட்பெயர்க்கு ஓதிய அத்தன்மையனவாய் ஆன்சாரியையும், அதன்மேல் அத்துச்சாரியையும் வருதல் நீக்கும் நிலைமைத்தன்று, அத்துவருமிடத்து ஒற்றாகிய மெய்கெடும் என்று கூறுவர் புலவர். |
ஒற்றுமெய் என்பது மெய்யினது பிறிதொரு நிலை என்பது இதனானும் வலியுறும். |
எ. டு:மகத்தாற் கொண்டான்; ஓணத்தாற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். ‘‘ஆனொடு அத்தும் வரைநிலை இன்றே’’ என்னாது ‘‘அத்தும் ஆன்மிசை’’ என்றதனான் சிறுபான்மை பூராடத்துக் கொண்டான் என ஆன்சாரியை இன்றி அத்து ஒன்றே பெற்று வருதலும் கொள்க. |
‘‘அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுதல்’’ (புண-31) என்பதனான் நிலைமொழி ஒற்றுக்கெடுமேனும் மாட்டேற்றிக் கூறுமிடத்து ஐயந்தோன்றாவண்ணம் இவ்வாறு விளங்கக்கூறுதல் முன்னையோர் மரபு என்பது தோன்ற ‘‘என்மனார் புலவர்’’ என்றார். இவ்விளக்கம் இனி இவ்வாறு வருவனவற்றிற்கும் ஒக்கும். |