பொருள் : சுட்டெழுத்துக்களை முதலாகக் கொண்டு நிகழும் வயின் என்னும் சொல்லீறும், எகரத்தை முதலாகக் கொண்டு நிகழும் வயின் என்னும் சொல்லீறும் மேற்கூறிய தன்மையவாய் வல்லெழுத்தியையின் றகரமாகத் திரியும் இயல்பின எனக் கூறுவர் ஆசிரியர். இச்சொல் பெரும்பான்மை சுட்டினையும் எகரத்தையும் முதலாகக் கொண்டல்லது வாராமையின் சுட்டு முதல் வயினும், எகர முதல் வயினும் என்றார். |
எ. டு: அவ்வயிற்கண்டான், இவ்வயிற்கண்டான், உவ்வயிற்கண்டான்; எவ்வயிற்கண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். ‘இயற்கைய’ என்றதனான் ‘வயின் வயிற்பற்றி’ என அடுக்கிவந்து இவ்விதி பெறுதலும் கொள்க. |