|
2. மொழிமரபு | மொழிமரபு என்னும் தொகைமொழி, மொழியினது மரபுகளைக் கூறும் இயல் என விரியும் அன்மொழித்தொகை. நூன் மரபிற் கூறிய எழுத்துக்கள் மொழியாகும் முறைமையும், அவை மொழிக்கண் நிற்கும் நிலையும், மொழிப்பொருள் மாறாமல் எழுத்து மாறிவரும் போலிமரபும் பற்றிக்கூறுதலின் இவ்வியல் மொழிமரபு எனப்பட்டது. | மேற்கூறிய குற்றியலிகரம் முதலாய மூன்றும் சார்ந்துவரல் மரபின ஆகலானும், எழுத்தளவினை நீட்டம் வேண்டின் நீட்டுதல் மொழிக்கண் நிகழ்தலானும் அவற்றின் இயல்புகளை நூன்மரபின் ஒழிபாக இவ்வியலின் தொடக்கத்தில் முறையாக வைத்துக் கூறிப் பின்னர் மொழியாக்கமும் போலியும் மொழி முதனிலை இடைநிலை இறுதிநிலைகளும் கூறுகின்றார். |
சூ. 34 : | குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும் | | யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு | | ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே | (1) | க-து: | குற்றியலிகரம் தனிமொழிக்கண் சார்ந்து வருமாறு கூறுகின்றது. | பொருள்:சார்ந்துவரல் மரபின எனப்பெற்ற மூன்றனுள் குற்றியலிகரம் “மியா” என்னும் உரையசையிடைச் சொல்லின்கண் அச்சொல்லின் உறுப்பாக நிற்கும் யா என்னும் எழுத்திற்குமேல், அவ்விடத்து வரும் மகர மெய்யை ஊர்ந்து நிற்குமெனக் கூறுவர் புலவர். | சினை = உறுப்பு. கிளவிக்கு என்பது வேற்றுமைமயக்கம். ஏகாரம் ஈற்றசை. மகரம் பற்றுக்கோடு, யகரம்சார்பு. எ-டு : மியா எனவரும். | இஃது இடைச்சொல்லாகலின் தனித்தியங்க ஒல்லாமல் கேள், செல், உண் முதலாய முதனிலை ஏவல் வினைகளை அடுத்துக் கேண்மியா, சென்மியா, உண்மியா எனவரும். ‘‘நிற்றல் வேண்டும்’’ என்பது ஒருசொல் நீர்மைத்தாய் வந்த வழிநூல் வாய்பாடு. |
|