சூ. 343 :இறாஅல் தோற்றம் இயற்கை யாகும்
(48)
 

க-து:

அஃது இறால் என்னும் சொல்லொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  அதிகாரத்தான்   நின்ற  தேன்  என்னும்  சொல் இறால்
என்னும்  சொல்  வருமொழியாகத்  தோன்றுதற்கண்  கேடும்  திரிபுமின்றி
இயல்பாயும் புணரும்.
 

எ. டு:  தேனிறால்  எனவரும்.  மற்று இவ்விதி பொது விலக்கணத்தாற்
பெறப்படுமாயினும்  இறால்  என்னும்  சொல்   வருமிடத்துப்   பின்வரும்
சூத்திரவிதியான்   நிலைமொழியீறு   திரிபுறுதலின்    ஏனைய     உயிர்
முதன்மொழி  வருங்கால்  இயல்பாதல்  போல  இதன் கண்ணும் இயல்பாக
வரும்  என  உணர்தற்  பொருட்டு   எடுத்தோதினார்  என்க. அற்றாயின்
‘‘ஒற்றுமிகு  தகரமொடு  நிற்றலும்   உரித்தே’’    என்புழி   உம்மையான்
இயல்பாதல்  பெறப்படாதோ  எனின்? அஃது  எதிர்மறை  உம்மையாகவும்
ஐயம் செய்யுமாகலின் பெறப்படாதென்க.
 

தோன்றுதற்கண் என்னும்   ஏழனுருபும், இயற்கையும்  என்னும்   எச்ச
உம்மையும் விகாரத்தாற்றொக்கன.