சிறுகுறிப்பு :- தொண்ணூறு - தொள்ளாயிரம் முதலிய புணர் மொழிகளைப் போலச் சாத்தந்தை முதலியவற்றிற்கும் கூறியுள்ளவிதி தொல்லோர் மரபென்க. தந்தை என்னும் படர்க்கைச் சொல் ஆசிரியர் நூல் செய்த காலத்து மூவிடத்திற்கும் உரிய பெயராக வழங்கி வரலாயிற்று எனத் தெரிகின்றது. தன்மைப்பெயர் எந்தை, முன்னிலைப்பெயர் நுந்தை என்பனவாகும். இவற்றுள் தம், நும், எம் என்பவை இடத்தைக் குறித்து நின்று ‘தை’ என்னும் முறைப்பெயரொடு புணர்ந்து ஒரு சொல்லாய் அமைந்துள்ளமை புலனாகும். ஏனைப் பெயர்களும் இவ்வாறே; யாய், ஞாய், தாய் எனவும் எங்கை, நுங்கை, தங்கை எனவும் எம்பின், நும்பின், தம்பின் எனவும் அமைந்துள்ளமை காணலாம். எனவே, சாத்தன் முதலாய பெயர்களின் முன்வந்து புணர்ந்த முறைப்பெயர் ‘தை’ என்பதேயாம். அதனான் சாத்தன் - தை, என்பவை நிலைமொழி ஈறு, வருமொழியின் கிளையொற்றாக மாறிச் சாத்தந்தை எனப் புணர்ந்து நிற்பதை அறியலாம். தொல்லோர் வகுத்தமரபு நோக்கி ஆசிரியர் ‘தை’ என்பதை வருமொழியாகக் கூறாமல், தந்தை என்பதையே கொண்டு கூறியுள்ளார் என்க. |