சூ. 348 :

ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு

பெயரொற் றகரந் துவரக் கெடுமே

(53)
 

க-து:

னகர  ஈற்றுப்  பெயர்  இரண்டற்கு  எய்தியதன்மேற் சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள் : ஆதன்,  பூதன்  என்னும்  பெயர்கள்,  தந்தை  என்னும்
முறைப்பெயர்வரின்,  மேற்கூறிய  திரிபுகளொடு   நிலைமொழிப்  பெயருள்
எஞ்சி   நின்ற  ஒற்றும்,   வருமொழிமுதலிற்  றிரிந்து   நின்ற  அகரமும்
முற்றக்கெடும். பெயரொற்றும் அகரமும் என விரித்துக் கொள்க.
 

எ.டு :ஆதன் + தந்தை உ ஆத் + அந்தை உ ஆ + ந்தை = ஆந்தை
எனவரும். பூதன் + தந்தை உ பூந்தை எனவரும்.
 

ஆதன்,  பூதன்  என்பவற்றின்  முதனிலையாகிய  குறைஉரிச் சொற்கள்
ஆத்,  பூத் என்பவையாகலின்  அவை  மெலிந்து  தை என்பதனொடு கூடி
ஆந்தை, பூந்தை  என  நின்றமையறிக. இதுவும்  தொல்லோரது  வழக்காறு
நோக்கிக் கூறிய இலக்கணமே என்க.
 

‘துவர’   என்பதனான்  அழான்,   புழான்   என்பவையும் அழாந்தை,
புழாந்தை எனவருதல் கொள்க என்பார் உரையாசிரியர். அவை  சான்றோர்
வழக்காயின் புறனடையாற் கொள்ளல் தகும்.