சூ. 35 :

புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே 

உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்

(2)
 

க-து:

குற்றியலிகரம்  புணர்மொழியிடத்து    வருதலும்    வருங்கால்
ஒரோவழிக் குறுகுதலும் உண்டு என அதன் மாத்திரையளவிற்குப்
புறனடை கூறுகின்றது.
 

பொருள்:மேற்கூறிய   குற்றியலிகரம்,    சொற்கள்    புணர்ந்தியலும்
நிலைமையின்கண் தனக்குரிய  அரைமாத்திரையினும்  குறுகி  ஒலித்தற்கும்
உரியதாகும். அங்ஙனம்  அது  குறுகி  ஒலிக்குமிடத்தினை  உணரக்கூறின்
அவ்விலக்கணம் குற்றியலுகரப் புணரியலுள் விளக்கமாகும்.
 

குற்றியலிகரம் என்பது  அதிகாரத்தான்  வந்தது.  உம்மை  எதிர்மறை.
ஏகாரம் ஈற்றசை. முன்னர் என்றது குற்றியலுகரப் புணரியலை.
 

எ-டு : (ஆடு யாது) = ஆடியாது (கவடு யாது) = கவடியாது  (தொண்டு
யாது) = தொண்டியாது  எனவரும்.  உம்மையான்  தெள்கியாது,  நாகியாது
எனக்குறுகாதும் வரும்.
 

முன்னவை  குறுகும்   என்பதற்கும்  பின்னவை  குறுகா  என்பதற்கும்
காரணம், ஆடி (திங்கள்)  கவடி  (வெள்வரகு)  தொண்டி  (ஊர்)  என்னும்
பெயர்கள்  யாது  என்னும்  சொல்லொடு  புணருங்கால்  ஆடி +  யாது =
ஆடியாது.  கவடி+யாது  =  கவடியாது.  தொண்டி+யாது  =  தொண்டியாது
எனவரும்.  ஆதனான்,  ஆடுயாது  (ஆடியாது)  ஆடி  யாது  (ஆடியாது)
எனவரும். இரண்டற்கும்  வேற்றுமை தெரியக் குற்றியலுகரத்தின் திரிபாகிய
(ஆடு-ஆடி) ஆடி  என்பதன் மாத்திரையை அரை மாத்திரையினும் குறுக்கி
ஒலிக்கவேண்டுமாயிற்றென்க.   திங்கட்  பெயராய்  வரும்  ஆடி  என்னும்
இயல்பீற்றினை   ஒருமாத்திரை   யளவிற்கு   இசைத்தல்  வேண்டுமென்க.
முன்னதைக் குறுக்காமல் ஒலிப்பின்  நிலைமொழி  ஆடு  என்பதா?  ஆடி
என்பதா? என்னும் ஐயம் நிகழுமென்க.
 

இனித்,  தெள்கியாது  நாகியாது  என்பவை  குறுகாமைக்குக்  காரணம்
தெள்கி-நாகி  என்னும்   இயற்பெயர்கள்   இல்லாமையான்   நிலைமொழி
தெள்கு நாகு என  ஐயமின்றி  உணரப்படுமாதலான்  அரை  மாத்திரையிற்
குறுகாது ஒலிக்கும். இக்குறுக்கத்தை  உணர்த்தும்  சூத்திரம்  குற்றியலுகரப்
புணரியலுள்  வரும்.  ‘‘யகரம்  வரும்வழி  இகரம் குறுகும்  உகரக் கிளவி
துவரத் தோன்றாது’’ (குற்-5) என்பதாம். இங்ஙனம் புணர்மொழியிடை வரும்
குற்றியலிகரம்  இயல்பீறன்றிக் குற்றியலுகரத்தின் திரிபாகவருதலின் ஈண்டுக்
கூறாமல் குற்றியலுகரப் புணரியலுள் கூறினார் என்க.