சூ. 350 :

அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்

நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை

மக்கள் முறைதொகூஉம் மருங்கி னான

(55)
 

க-து:

மேற்கூறிய  இயற்பெயர்கள்  மக்கள்   முறைமைச்  சொல்லொடு
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  மேற்கூறிய   னகாரஈற்று   இயற்பெயர்கள்முன்   மக்கள்
முறைதோன்ற நிற்கும்  சொற்கள்  புணருமிடத்து,  அவை  மெய்யொழித்து
இறுதி  கெட்டுநின்ற  வழியும், (உம்மையான்)  மெய்யொடு  இறுதி  கெட்டு
நின்ற வழியும் அம் என்னும் சாரியை பெற்று நிற்றலும் உரித்தாகும்.
 

எ - டு:  கொற்றங்கொற்றன்  -  மூலங்கீரனார்   -   பூதம்புல்லனார்,
சல்லியங்குமரனார்    எனவரும்.     பூதன்   +    தத்தனார்    என்பது
மெய்யொடுங்கெட்டுப் பூதத்தனார் (அகம்-74) எனவும் வரும்.
 

உம்மையான் கொற்றங்குடி,  சாத்தங்குடி எனவருதலும் கொள்க என்பார்
நச்சினார்க்கினியர்.      அவை    வழூஉவழக்காதலின்    ஒவ்வாதென்க.
கொற்றமங்கலம், சாத்தமங்கலம் என்பவை உயிரீறாகிய (தொகை-11) என்னும்
தொகைமரபுச் சூத்திரத்து ‘‘எல்லா வழியும்’’ என்பதனான் முடியும் என்க.