சூ. 355 :

முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்

இல்லென் கிளவிமிசை றகரம் ஒற்றல்

தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே

(60)
 

க-து:

முன்றில் என்னும் சொல் இலக்கணமரூஉவாய் வருமென்கின்றது.
 

பொருள் :  முன்   என்னும்  சொற்கு  முன்னர்வரும்  இல்  என்னும்
சொல்லுக்கு  மேல் ஒரு  றகர ஒற்றுத் தோன்றி நிற்றல் பழைய இயல்பினை
உடைய வழக்கின்கண் மருவி வந்த மரபாகும்.
 

எ - டு:  முன்ற் + இல் = முன்றில் எனவரும். இல்  முன் எனற்பாலது
மாறி   நின்றுழி   முன்னில்   என  ஏறி  முடியாமல் ஒரு  றகர  ஒற்றுப்
பெற்றுமுடிதலின் மரூஉவாயிற்றென்க.