சூ. 359 :அதன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே
(64)
 

‘‘மகன்வினை     கிளப்பின்     முதனிலை      இயற்றே’’   என்பது
உரையாசிரியன்மார் பாடம்.
 

க-து:

தாயென்பதன்   வினையைச்    சுட்டிக்   கூறுமிடத்து  மிகும்
என்கின்றது.
 

பொருள் தாய்   என்னும்  பொதுப்பெயரின்  தொழிலைக்  கிளந்து
கூறுமிடத்துப்     பொதுவிதியாக      முன்னர்க்கூறிய     இயல்பிற்றாய்
வல்லெழுத்துவரின் மிகும். வினையென்றது தொழிற்பண்பினை.
 

எ - டு: தாய்க்காட்சி, செய்கை, தோற்றம், பரிவு எனவரும்.
 

இனி  உரையாசிரியன்மார், ‘‘மகன்வினை  கிளப்பின்’’  எனப்  பிறழ்ந்த
பிழையான  பாடத்தை  உண்மை   எனக்கொண்டு   மகனது  வினையைக்
கூறுமிடத்து   வல்லெழுத்துமிகும்   எனப்   பொருள்   கூறி, ‘மகன்றாய்க்
கலாம்’  என எடுத்துக்  காட்டி  அதற்கு மகன் தாயொடு கலாய்த்த கலாம்
எனப் பொருள் கூறினர்.
 

மகன் வினையேயன்றி, மகள்தாய்க் கலாம் என மகள் வினைகிளப்பினும்,
வாளா  தாய்க்கலாம்  எனக்கிளப்பினும்  வல்லெழுத்து  மிகுதலாகும். தாய்
என்பது  விரவுப்  பெயராகலான்   மகவு,  பிள்ளை   என   அஃறிணைச்
சொற்களைக் கூட்டிக் கூறினும் இவ்விதி  பொருந்துமாகலானும்  மகன் என
வரைந்து  கூறுதல்  குன்றக்  கூறலாம். அன்றியும்  வல்லெழுத்து மிகுதற்கு
மகன்    என்னும்   சொல்   எவ்வாற்றானும்  ஏதுவாகாமையானும்   அது
பாடமன்மை தெளியலாம். முதனிலை இயற்றே என்னும் பொழிப்பெதுகைக்கு
அதன்வினை  என்பது  பொருந்தி  யாப்பிசை  சிறந்து நிற்றலையும் ஓர்ந்து
கொள்க.