சூ. 37 :இடைப்படின் குறுகும் இடனுமா றுண்டே

கடப்பா டறிந்த புணரிய லான

(4)
 

க-து:

குற்றியலுகரம்   புணர்மொழிக்கண்   வருதலும்    வருங்கால்
ஒரோவிடத்துக்    குறுகி     நிற்றலும்    உண்டு    எனக்
குற்றியலுகரத்தின் மாத்திரைக்குப் புறனடை கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய குற்றியலுகரம் நெறிமுறை அறிதற்குரிய புணர்ச்சி
இயல்பினான்   இருமொழிகளுக்கு     இடையே     நிற்பின்      தனது
அரைமாத்திரையளவினும் குறுகி ஒலிக்கும் பக்கமும் உண்டெனக்   கூறுவர்
புலவர்.
 

‘இடனும்’     என்னும்      எதிர்மறை     உம்மை,       குறுகாது
நிற்குமிடம்  பெரும்பான்மை என்பதை உணர்த்திநின்றது. ஏகாரம் ஈற்றிசை.
‘‘அறிவறிந்த மக்கட்பேறு அல்லபிற’’ என்பதனுள் உள்ள ‘‘அறிந்த’’ என்பது
போல ஈண்டு அறிந்த என்பது அறிதற்குரிய  என்னும் பொருள்பட நின்றது.
‘‘புணரியலான’’ என்பது  ஏதுப்பொருட்டாய ஆனுருபு ஈறு திரிந்து நின்றது.
வல்லொற்றுத்   தொடர்மொழிக்   குற்றியலுகரமே    குறுகும்    என்பது
குற்றியலுகரப் புணரியலுள் பெறப்படும்.
 

எ-டு :கொக்குக்குறிது -  கச்சுச்சுருக்கம், பத்துத்துடி - செப்புப்புதிது
எனவரும்.
 

இனி   நாகுகால்,   பரிசுப்பொருள்,  எஃகு  சிறிது - உல்குபொருள் -
அன்புச்சொல் என்பனவும் ; கொக்குப்பெரிது,  கச்சுக்குறிது  எனவருமொழி வல்லெழுத்துப் பிறிதாகி வருமிடத்தும் குறுகாது என்க.
 

‘‘கடப்பாடறிந்த’’            என்றதன்கருத்தாவது:-     குற்றியலுகரம் தனிமொழியைவிடப் புணர்மொழிக்கண் திரிபின்றிப்  புலனாகும்  என்பதாம். அஃதாவது, ‘நோக்கு’ என்னும்  சொல்  தனித்து நிற்பின்  அது பெயராயும் முதனிலை ஏவலாயும்  கொள்ளற்கு  உரியதாகும்.  பெயராக  நிற்குமிடத்து இதழ் சிறிது  குவியக்   கூறுங்கால்  குற்றியலுகரமாகவும்,  நன்கு குவியக் கூறுங்கால் முற்றியலுகரமாகவும் நிற்கும்.
 

    

‘‘இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு 

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து’’
 

என்புழி, நோக்கு என்னும் சொல்
 

தனித்து நிற்புழி ஒரு மாத்திரையாக நிற்பதனையும் இருநோக்கு  நோய் நோக்கு என்பவை வருமொழி நோக்கிக் குற்றியலுகரமாயே   நிற்பதனையும் காண்க.
 

குற்றுகரக் குறுக்கத்தை உணர்த்தும் சூத்திரம் குற்றியலுகரப் புணரியலுள் “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்  தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே” என்பதாகும். (409)