சூ. 372 :

இல்லென் கிளவி இன்மை செப்பின்

வல்லெழுத்து மிகுதலும் ஐஇடை வருதலும்

இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும்

கொளத்தகு மரபின் ஆகிடன் உடைத்தே

(77)
 

க-து:

இல் என்னும் பண்புரிச் சொற்காவதோர் மரபுணர்த்துகின்றது.
 

பொருள்:  இல் என்னும் குறையுரிச்சொல், வினைக்குறிப்புப் பொருளை
உணர்த்தாமல் இன்மைப் பண்பை உணர்த்தி நிற்றற்கண், வல்லெழுத்துவரின்
மிகுதலும் ஐகாரச் சாரியை இடையே வருதலும் (இரண்டுமின்றி)   இயல்பாக
நிற்றலும்  அன்றி,   ஆகாரம்   வருதலும்   கொள்ளத்தகும்   மரபினான்
இலக்கணமாகும் இடம் உடைத்து.
 

ஐ  இடைவருதல்   என்றதனான்,   லகரத்திற்கும்   வருமொழி  முதல்
வல்லெழுத்திற்கும்   இடையே   ஐகாரம்   சாரியையாக   வரும்  என்பது
பெறப்பட்டது.
 

எ - டு:  சாத்தன்  இல்லைக்  கொடியன்,  சிறியன்,  தீயன், பெரியன்
எனவும், இவன் கண்ணில் குருடன், பண்பில்லாச் சிறியன்  எனவும்  வரும்.
இவற்றின் பொருள்:  சாத்தன் கொடுமையில்லாதவன் எனப் பண்புணர்த்தும்.
இல்லை  கொடியன்   எனமிகாதுவரின்  அது  வினைக்குறிப்பு  முற்றாகும்.
கண்ணில்    குருடன்   என்பது   கண்ணின்மையாற்   குருடன்   எனப்
பண்புணர்த்தி நிற்கும். பண்பில்லாச்  சிறியன்  என்பதும்  பண்பின்மையாற்
சிறியன்  எனப்   பண்புணர்த்தி     நின்றது.  இல்லாக்  கொற்றன்  என
வலிமிக்குவரின்  அது   ஈறு  கெட்ட  எதிர்மறைக்  குறிப்புப்  பெயரெச்ச
வினையாம்.
 

குறிப்பு முற்றும்,  பெயரெச்சமும்  ஆதலைத்  தவிர்க்க,  ஆசிரியர்  ஐ
இடை   வருங்கால்   வல்லெழுத்து  மிகுதலையும்   ஆகாரம்  வருங்கால்
வல்லெழுத்து இயல்பாதலையும் சுட்டி விளக்கினார்.
 

இல்லை என்னும் குறிப்புமுற்று, முன்பு இருந்து பின் இல்லாத நிலையை
உணர்த்தும்  -   வால்இல்குதிரை   என்றாங்கு  வரும். இன்மை  என்னும்
பண்புப்பெயர் எப்பொழுதும் இல்லாமையை உணர்த்தும் - கொம்பில்குதிரை
என்றாங்குவரும். ஈண்டுக் கூறிய இன்மை என்பது பொருண்மை சுட்டலாகிய
‘‘உண்மை’’   என்னும்   பண்புச்  சொற்குரிய  எதிர்மறைச்  சொல்லாகும்.
இவ்வாறே உளதாதற்றன்மை உணர்த்தும் ‘‘உண்டு’’ என்னும்  சொல்லையும்
பின்னர் விதந்து விதி கூறுவார்.