சூ. 375 :

பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு

ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே

(80)
 

க-து:

சில லகரஈற்றுப்பெயர் அம்முச்சாரியை பெறுமென்கின்றது.
 

பொருள்பூல்,  வேல்,  ஆல் என்னும்  அம்மூன்று   பெயர்கட்கும்
அம்முச்சாரியை இடையே வரும்.
 

எ - டு:  பூலங்கோடு,  வேலங்கோடு, ஆலங்கோடு-செதிள், தோல், பூ
எனவரும். இவை மூன்றும் மரப்பெயர்.
 

வருமொழி வரையாமையான்  பூலஞெரி,  வேலஞெரி, ஆலஞெரி-நிழல்,
முறி,   விறகு    என   ஏனைக்கணத்தும்   அம்முப்  பெறுதல்  கொள்க.
பூலாங்கோடு,  பூலாங்கழி என  ஆம்சாரியையும் வருமென்பார் உரையாளர்.
அஃது    வழூஉவழக்காகலின்    ஏலாது.     சான்றோர்    வழக்காயின்
வழுவமைதியாகப் புறனடைப் பாற்படுத்துக் கொள்க.