சூ. 376 :தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல
(81)
 

க-து:

லகர ஈற்றுத் தொழிற் பெயர்கட்குரிய விதி கூறுகின்றது.
 

பொருள் : லகார ஈற்றுத்   தொழிற்பெயர்  எல்லாம்  ஞகார  ஈற்றுத்
தொழிற்  பெயரியல்பினவாம்.  அஃதாவது  உகரம்  பெற்று  வல்லெழுத்து
மிகுதலும், ஞநம வரின் இயல்பாதலுமாம்.
 

எ - டு:  வெல்லுக்கடிது;  புல்லுக்கடிது;  கொல்லுக்கடிது,  சிறிது,  தீது,
பெரிது  எனவும்;  வெல்லு  ஞான்றது, நீண்டது,  மாண்டது எனவும் வரும்.
கடுமை, சிறுமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி என வேற்றுமைக்கண்ணும்
ஒட்டிக் கொள்க.
 

இனிப்,  பின்னல்  கடிது,  துன்னல் கடிது  என்பவை  பின்னற்  கடிது,
துன்னற்கடிது எனப்  பொதுவிதி  பெற்று  வருவதனை  ‘எல்லாம்’ என்னும்
மிகையாற்  கொள்க என்பார் உரையாசிரியர். அவை  பின், துன்  என்னும்
னகர ஈறு அல்லென்னும் தொழிற்பெயர்  விகுதி  பெற்று  நிற்பனவாதலின்
லகர ஈறாதற்கு ஏலா என்க.