வகர ஈற்றுப் புணர்ச்சி விதி கூறுவான் தொடங்கி அவ் ஈறு நான்கே சொற்களில் வருதலின் அவற்றை விதந்து கூறுவார். வகர ஈற்றுச் சுட்டுப் பெயர் மூன்றும் உருபுபுணர்ச்சிக்கு ஓதிய இயல்பினவாய் நிலைபெறும் என்கின்றார்.
பொருள் :சுட்டெழுத்துக்களை முதலாக உடைய வகர ஈற்றுச் சுட்டுப் பெயர், முன்னர்க்கிளந்தோதிய உருபு புணர்ச்சிக்குரிய இயல்பினவாய் நிற்கும். அஃதாவது; வற்றுச் சாரியை பெற்றுப் புணரும் என்றவாறு.
எ - டு: அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு; செவி, தலை, புறம் எனவும்; அவற்று ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை எனவும் வரும்.
முற்படக் கிளந்த என்றதனான் வற்றொடு இன்சாரியையும் ஒருங்கு பெற்று அவற்றின் கோடு, இவற்றின் கோடு, உவற்றின் கோடு என வருதலும் கொள்க.