ஆய்த எழுத்து மொழிக்கண் சார்ந்து வருமாறு கூறுகின்றது.
பொருள்:முப்பாற்புள்ளி என்ற ஆய்த எழுத்து; குற்றெழுத்தின் முன்னர்த்தாய் உயிரொடு புணர்ந்த வல்லெழுத்து ஆறற்கும் மேலதாய் வரும்.
நிற்றல் வேண்டுமென்பது அதிகரித்தது. குற்றெழுத்தும் உயிர்மெய் வல்லெழுத்தும் சார்பு. ஆய்தம், உயிரும் ஒற்றுமாகிய இருதன்மையும் உடையதாகலின் பற்றுக்கோடு வேண்டிலது. அச்சார்புகளே பற்றுக்கோடாயும் நிற்குமென்க. எனவே தனிமொழியாயினும் புணர் மொழியாயினும் யாண்டும் இவற்றினிடையேதான் வருமென்றறிக. ஒலி ஒற்றுமை கருதிக் குற்றியலிகரத்தையும் குற்றியலுகரத்தையும் உயிரெனக் கூறினார்.
எ-டு :எஃகம், கஃசு, முஃடீது, அஃதை, கஃபு, பஃறி, மஃகான், வெஃகாமை எனத் தனிமொழிக்கண்ணும் அஃறிணை, அஃகடிய, எஃகியாது, கஃசியாது எனப் புணர்மொழிக்கண்ணும் வரும்.
கஃசு எஃகு அஃது என்பவை தனித்து நிற்புழி முற்றியலுகரமாக நிற்றற்கும் ஏற்குமாதலின் பொதுப்பட “உயிரொடு புணர்ந்த வல்லாறு’’ என்றார். ஆய்தப்புள்ளியின் பிற இயல்புகளை வருஞ்சூத்திரங்களாற் கூறுப.