சூ. 382 :ஏனை வகரம் தொழிற்பெய ரியற்றே
(87)
 

க-து:

‘தெவ்’ என்னும் வகர ஈறு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :சுட்டுவகர  ஈறு  ஒழிந்த  ஏனை  வகர ஈற்றுச் சொல்லாகிய
தெவ்  என்னும்   உரிச்சொல்லீறு   இருவழியும் ஞகார  ஈற்றுத்  தொழிற்
பெயரியல்பிற்றாய் உகரம் பெற்றுப் புணரும்.
 

எ - டு:  தெவ்வுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் தெவ்வுக் கடுமை,
சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ஞ ந ம என்பவற்றொடும் ஒட்டிக்
கொள்க. தெவ்வு = பகைமை.
 

இதனானும்   தெவ்   என்னும்   சொல் வினைநிலை எய்தி  வாராமை
புலனாம்.  உகரம் பெறாமல் மகரத்தொடு   புணருமிடத்துத்   தெம்முனை,
தெம்மடங்கிய  எனவரும். காரணம்   வகரம்  மகரத்தொடு   மயங்குதற்கு
ஏலாமையான் மகரமாகத் திரியும். இதனைப் புறனடையாற் கொள்க.