சூ. 384 :

தாழென் கிளவி கோலொடு புணரின் 

அக்குஇடை வருதல் உரித்து மாகும் 

(89)
 

க-து:

தாழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :தாழ் என்னும் பெயர்ச்  சொல், கோல் என்னும் சொல்லொடு
புணரின்,  அக்கு  என்னும்  சாரியை இடையே வருதற்கு உரித்தும் ஆகும்.
உம்மை - எதிர்மறை.
 

எ - டு:   தாழக்கோல் எனவரும். உம்மையால் தாழ்க்கோல்  எனவும்
வரும்.   இத்தொகை,   தாலிப்பொன்   என்பது   போலத்   தாழிற்குரிய
கோல்   எனவிரியும்.   தாழாகிய  கோல்  என  இருபெயரொட்டெனினும்
ஒக்கும். கோல் என்பது கணைமரம். 
 

தாழ்   என்பது    தழுவு   என்னும்  சொல்லின்   திரிபாகும்.  அது
புதவக்கதவங்களைத் தழுவி (அடைத்து)  நிற்பதாகலின் காரணப்  பெயராம்.
அத்தாழினை வனைதற்குரிய  தடியே  ஈண்டுக்கோல்  எனப்பட்டதாகலின்,
நான்காவது விரிதலே சால்புடைத்தென்க.
 

உரையாசிரியன்மார்   தாழக்கோலினைத்   திறவுகோல்  எனக் கருதித்,
தாழைத் திறக்குங்கோல் என  இரண்டாவது விரியும் என்றனர். திறவுகோல்
என்பது திறக்கும் கருவி; அது தாழ் எனற் கொல்லாது.