சூ. 385 : | தமிழென் கிளவியும் அதனோ ரற்றே |
(90) |
க-து: | தமிழ் என்னும் சொல்லும் அக்குப்பெற்று முடியும் என்கின்றது. |
பொருள் :தமிழ் என்னும் ழகர ஈற்றுச் சொல்லும் தாழ் என்பதற்கு ஓதியாங்கு அக்குச்சாரியை பெற்றுப் புணரும். |
எ - டு: தமிழக்கூத்து, செய்தி, தூய்மை, பாணி எனவரும். தமிழிற்குரிய கூத்து என நான்காவது விரிக்க. ஆரியக்கூத்து அன்று என்றவாறாம். உடைமைப் பொருள் விரிக்கின் இச்சாரியை ஆறனுருபாய் மயக்கஞ்செய்யுமென்க. |
மேலைச்சூத்திரத்து எதிர்மறை உம்மையான் தமிழ்க்கூத்து, தமிழ்ச்செய்தி எனச் சாரியை இன்றியும் பொதுவிதியாற் புணருமென்க. |
கோலொடு புணரின் என்றாற்போல இதற்கு வருமொழி வரைந்து கூறாமையான் ஏனைக்கணம்வரினும், சாரியைப் பேறு கொள்க. |
எ - டு: தமிழஞாலம், தமிழநூல், தமிழமரபு, தமிழவாழ்வு, தமிழவரையர் எனவரும். |