ஏழ் என்னும் சொல் பிற அளவைப் பெயர்களொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள்:மேற்கூறிய ஏழ் என்னும் சொல்முன் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் எண்ணுப் பெயரும் வரும்வழி நெட்டெழுத்தாகிய முதல் குறுகலும் ழகரத்தின் மேல் ஓர் உகரம் வருதலும் ஆசிரியர்க்குத் தவிர்க்கும் நிலையின்று. எனவே, முதல் குறுகும்; உகரம் பெறும் என்றவாறு.
எ - டு:எழுகலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும் எழுகழஞ்சு, தொடி, பலம் எனவும் எழுமூன்று, எழுநான்கு, எழுநூறு எனவும் வரும்.
அளவு முதலிய பெயர்க்குக் கடிநிலை இன்று என்றதனான் அவை பிறபொருட் பெயராய் வரும்வழி இயல்பாக நின்று புணருமென்க.