சூ. 395 :கீழ்என் கிளவி உறழத் தோன்றும்  
(100)
 

க-து:

கீழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்:  கீழ்  என்னும்  பண்புப் பெயர்ச்சொல் வல்லெழுத்து வரின
இயல்பாயும், மிக்கும், உறழ்ந்தும்வரும்.
 

எ - டு:  கீழ்குலம் - கீழ்க்குலம், சாதி, தொழில், பண்பு எனவரும்.
 

பொதுப்படக் கூறினமையின் கீழ் என்பது  இடமுணர்த்தி  வருங்காலும்
இவ்விதிகொள்க. எ - டு:  கீழ்குன்றம்,  சுனை,  தெற்றி,  பாறை  எனவும்
கீழ்க்குன்றம்,   சுனை,  தெற்றி,  பாறை  எனவும்  வரும்.  இடமேயன்றித்
திசையுணர்த்தி வருங்காலும் இவ்விதி ஒக்கும்.
 

எ - டு:  கீழ்குளம்  -  கீழ்க்குளம்,  சேரி, தோட்டம், பாடி எனவரும்.
உறழத்   தோன்றுதல்    பண்பிற்கும்,    மிகுதல்      ஏனையவற்றிற்கும்
வலியுடைத்தென்க.