எழுத்தினியலாஆய்தம், அஃகாக்காலையான் உருவினும் இசையினும் அருகித் தோன்றும் (அவை) எல்லாம் குறிப்பு (மொழிகளாம்) எனக்கூட்டிப் பொருள் கொள்க. அவை என்னும் சுட்டும் ஆம் என்னும் பயனிலையும் அவாய் நிலையான் வந்தன. |
எ-டு :கஃறென்னும் கல்லதரத்தம் என்பது ‘கற்ற்’ என்னும் நிறக்குறிப்பு. சுஃறென்னும் தண்டோட்டுப் பெண்ணை என்பது ‘சுற்ற்’ என்னும் ஓசைக்குறிப்பு. இதனைக் கஃஃறென்னும் சுஃஃறென்னும் என்றும் எழுதிக்காட்டுப. |
இச்சூத்திரத்தின் கருத்தாக இளம்பூரணர், குறிப்புமொழிகளின் வரும் ஆய்தத்தை வரிவடிவில் இரண்டிட்டு எழுதப்படாது எனக்கூறுவர். இரண்டிட்டு எழுதின் அளபெடையாய்விடும் என்பது அவர் கருத்துப்போலும். |
குறிப்புமொழிகளின் வரும் ஆய்தம் அரைமாத்திரையிலடங்காது ஒரு மாத்திரையும் ஆகாது இடைப்பட்டுச் சிறிது மிக்கிசைத்தலின் உருவினும் இசையினும் அருகித் தோன்றும் ஆய்தம் மிகும் என்னாது ‘அஃகாக்காலை’ என்றார். அம்மிகுதியைக் குறிக்க வேறுவரிவடிவ அடையாளமின்மையின், சுஃஃறு என இரண்டிட்டு எழுதிக்காட்டினும் இழுக்காகாதென்க. இவை அளபெடையல்ல என உணர்தல் வேண்டும். என்னை? எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர் வெஃஃகுவார்கில்லை வீடு என்புழிப்போல ஆய்த அளபெடை பெயர் வினையிடத்தே வருதலன்றிக் குறிப்புமொழிக்கண் வாரா என்க. |
‘‘எழுத்தினியலா’’ என்பது ஆய்தத்திற்கு இனஞ்சுட்டாத அடை. அஃது ஆய்த எழுத்தின் இலக்கணத்தைச்சுட்டி நின்றது. அதன் இலக்கணமாவது மெய்போல உயிரை ஏற்காமையும், உயிர்போல மெய்களை ஊராமையுமாம். அதனான் இதற்குத் தனிநிலை என்பதும் பெயராயிற்று. பிற விளக்கங்கள் எனது சார்பெழுத்து ஆய்வுக் கட்டுரையுள் கண்டுகொள்க. |