சூ. 400 :

நெடியதன் இறுதி இயல்பா குநவும் 

வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் 

போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே 

(105)
 

க-து:

ஒருசார்  ளகர ஈற்றுச் சொற்களுக்குப் புறனடை வகையான் விதி
கூறுகின்றது.
 

பொருள்:   நெட்டெழுத்தின் பின் நிற்கும் ளகர ஈற்றுச் சொற்கள் சில
இயல்பாக   வருவனவும்,  வேற்றுமைப்   புணர்ச்சியல்லாத  அல்வழிக்கண்
வேற்றுமைப்  புணர்ச்சிக்குரிய விதியொடு  நிற்றலும்  உளவாம்; அவற்றைப்
(மரபுணர்ந்து) போற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
 

எ - டு:  கோள்கடிது; தாள்கடிது, சிறிது, பெரிது என இவை இயல்பாக
வந்தன.  நாட்கடிது-புட்பறந்தற்றே, உட்பொருள்  என  வேற்றுமையல்வழித்
திரிந்தன.  புட்டேம்பப் புயன் மாறி  என்பது  தகரம் வருதலினால் எய்திய
திரிபாகலின் அதனைக் காட்டல் நிரம்பாதென்க.
 

இனி    வெட்பாலை,   கோட்பாடு   என்றாற்  போல இருமொழி ஒரு
சொல்லாய்   நிற்பனவற்றையும்,   நாட்படவரும்    என்றாற்     போலப்
புணர்மொழியாக     வருவனவற்றையும்   ஓர்ந்தறிதல்  வேண்டுமென்பார்
‘போற்றல் வேண்டும்’ என்றார்.
 

உதளங்காய்  எனச்    சாரியை    பெறுதலும்    கொள்க   என்பார்
நச்சினார்க்கினியர். சாரியை பெறுதல் “பெயருந்  தொழிலும்  பிரிந்தொருங்
கிசைப்ப’’   (புண-30)    என்னும் சூத்திரத்தான்   எய்துமாகலின்  ஈண்டு
அமைத்தல் வேண்டா என்க.