சூ. 405 :

உணரக் கூறிய புணரியல் மருங்கின் 

கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே 

(110)
 

க-து :

புள்ளிமயங்கியலுக் காவதொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள்:  புள்ளியீறுகள் நின்று நாற்கணத்தொடும் மயங்கிப்  புணரும்
முறைமைப்பற்றித்  தெளிவாகக்கூறிய  புணர்ச்சி  விதிகளின்  பக்கத்தானே,
கூறாதனவற்றிற்குச்  செய்கையறிந்து   புணர்த்தற்  குரியவற்றை ஆராய்ந்து
சான்றோர்   வழக்கினையும்   செய்யுளினையும் நோக்கிக்கருதி  அவற்றை
விதியாகக்கொள்க.
 

காணுதல்  = ஆராய்தல். ‘கண்ணினர்’  என்பது  முற்றெச்சம். ‘கொளல்’
என்பது அல்லீற்று  வியங்கோள்.  ஏகாரம்   இசைநிறை.   ‘உணரக்கூறிய’
என்றது   இவை  இவ்வேதுவான் இவ்வாறாகப்   புணரும் என   உணரும்
வண்ணம்  கூறிய  இலக்கணமுறைமையை.  நூற்பாக்களை  யன்று. எனவே,
அம்முறைமையாற் பிறவற்றையும் அறிந்தமைத்துக் கொள்க என்றவாறாம். 
 

வரலாறு:   ஞகர   நகர   ஈறுகள்  உரிஞின் குறை, பொருநின் குறை,
வெரிநின் குறை  என வேற்றுமைக்கண் இன்சாரியை பெறுதலும்; ணகர ஈறு
மண்ணப்பந்தம்,   எண்ணநோலை   எனவும் மண்ணுக்குள், விண்ணுக்குள்
எனவும்,  ஆணின்கால்,   மண்ணின்மேல்   எனவும்  முறையே அகரமும்,
உகரமும்  இன்னும்  ஆகிய சாரியை  பெறுதலும்; மகர ஈறு குளத்துக்கரை,
மருதத்துப்புறனே, மரத்தின்புறம் என அத்தும்  இன்னும்  ஆகிய சாரியை
பெறுதலும்;   னகர   ஈறு  நாயின் கால், வேயின் தலை என இன்சாரியை
பெறுதலும்; ரகர ஈறு அல்வழிக்கண் நீர்  குறைந்தது,  நீர் சுருங்கிற்று என
உறழாது  இயல்பாதலும்;  லகர  ஈறு  வேற்றுமைக்கண்  விழன்காடு  என
னகரமாதலும்;    ஆலங்கானம்,    புடோலங்காய்   என அம்முச்சாரியை
பெறுதலும்;  அழலத்துக்   கொண்டான்   என அத்துச்சாரியை பெறுதலும்;
அல்வழிக்கண்  அழுக்கற் போர்  என  றகரமாகத்   திரிதலும்;  நெல்லுப்
பெற்றேன்,  சொல்லுக்குத் தோற்றது, கல்லுப்பாறை என இருவழியும் உகரம்
பெறுதலும்; கல்லம்பாறை  என  அல்வழிக்கண்  அம்முப்பெறுதலும்; வகர
ஈற்றுள்  தெவ்  என்பது தெம்முனை என  மகரமாகத் திரிதலும்; ழகர ஈறு,
வேற்றுமைக்கண்   யாழின்கோடு   என இன்சாரியை பெறுதலும்; ஏழுநாள்,
பதினேழு  என எண்ணுப்பெயர் அல்வழிக்கண்  உகரம்  பெறுதலும்; ளகர
ஈறு   வேற்றுமைக்கண்   ஒருநாளைக்குழவி, ஒரு  திங்களைக் குழவி என
ஐகாரச் சாரியை பெறுதலும்; வாளின்புறம்  என  இன்சாரியை  பெறுதலும்;
தேளுக்குப்  பகை,  கொள்ளுக்கு விற்றான் என உகரம் பெறுதலும்; பிறவும்
அவ்வச் சூத்திரங்களுள் புறனடையாற் கொள்ளத்தகும் என்றவையும் பிறவும்
இவ்வாறு பொருந்தவருவனவெல்லாமும் ஆம் என அமைத்துக் கொள்க.
 

புள்ளிமயங்கியல் முற்றியது