9. குற்றியலுகரப் புணரியல்
 

தனித்து  வரல்  மரபினையுடைய  உயிரீறு  புள்ளியீறுகளின்  புணர்ச்சி
விதிகளைக் கூறிச் சார்ந்து வரல்மரபின எனப்பட்டவற்றுள் மொழிக்கு ஈறாக
நிற்பதற்குரியது  குற்றியலுகரம்   மட்டுமேயாதலின்; அஃது ஈறாக   நின்று
நாற்கணங்களொடும்   புணருமாறு  கூறுதலின்,   இவ்வியல்  குற்றியலுகரப்
புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று.
 

குற்றியலுகரம்   வல்லெழுத்துக்களை  ஊர்ந்து,  ஏனை எழுத்துக்களைச்
சார்ந்து,    நிறுத்த  சொல்லின்    ஈறாய்க்   குறித்து    வருகிளவியொடு
இருவழியானும்  புணருங்கால், ஏனைய  உயிரீறு  புள்ளியீறுகளைப் போலத்
தனித்து வரல் மரபிற்றாய் மயங்காமல் சார்ந்து  நின்று நாற்கணங்களொடும்
புணர்தலானும்,   உயிர்   வருங்கால்  தான்   கெடாமல்  அதனை  ஏற்று
உயிர்மெய்யெழுத்தைப் போல ஒன்றி நின்று மாத்திரை  மட்டுமே  குன்றிப்
புணர்தலானும், ஏனைக்கணங்கள்  வரின் முற்றியலுகரத்தொடு ஒப்ப நேர்பும்
நிரைபுமாக அசைக்குறுப்பாய்  நிற்றலானும், புணருமிடத்து எய்தும் திரிபுகள்
தனக்கு  முன்னும்  பின்னும்  நிற்கும்  எழுத்துக்கள் பெறத் தான் திரிபுறுத
லின்மையானும்   குற்றியலுகர  மயங்கியல்  என்னாது  புணரியல் என்றார்.
புணர்ச்சி என்பது தத்தம்தன்மை   திரியாமல்  செப்பின்   புணர்ச்சிபோல்
நிற்பது.   மயக்கம்   என்பது மணியுள் கோத்த நூலைப் போலத் திரிபுற்று
நிற்பது.
 

குற்றியலுகரம் எனப் பொதுப்பட  நிற்பினும் மொழிமுதற்  குற்றியலுகரம்
ஒன்றேயாகலானும்  அது  புணரியல் விதிப்படி  முதலொலியாகாமையானும்
ஈண்டுக் கூறுவது மொழியிறுதிக் குற்றியலுகரம் என்பது பெறப்படும்.
 

‘‘நெட்டெழுத் திம்பரும்  தொடர்மொழி யீற்றும் வல்லா றூர்ந்து வரும்’’
எனப்பட்ட குற்றியலுகரம் சார்பெழுத்து  என்பதும், அஃது  அரைமாத்திரை
யளவினதாய்ப்   புணர்ந்து   நிற்கும்  என்பதும், தான்  சார்ந்து   நிற்கும்
எழுத்துக்களின்   பிறப்பிலக்கணங்களையே   தானும்   பெறும்  என்பதும்
நூன்மரபு  முதலிய   நான்கியலினுள்    கூறப்பெற்ற    இலக்கணங்களாற்
பெறப்பட்டன.
 

அஃது    உருபொடு   புணருமாறு    உருபியலுள்ளும்    பொதுவாய
சிலவிதிகளைத்     தொகைமரபினுள்ளும்   கூறினமையின்,   இவ்வியலுள்,
‘‘தொடர்மொழி  யீற்றும்’’   என்றதனை  ஐந்தாக   விரித்து  அவற்றிற்குப்
பெயரும்   முறையும்  கூறி, அவை  இருவழியானும்  பொருட்பெயரொடும்
அளவைப் பெயர்களொடும் புணருமாறு கூறுகின்றார்.
 

சூ. 406 :

ஈரெழுத் தொருமொழி உயிர்தொடர் இடைத்தொடர் 

ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் 

ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன் 

(1)
 

க-து :

மொழிமரபினுள்   நெட்டெழுத்திம்பரும்   தொடர்மொழியீற்றும்
வரும்   எனப்பெற்ற   குற்றியலுகரம்  தான்   ஊர்ந்து நிற்கும்
எழுத்திற்கு  மேலாகத் தொடர்ந்து சார்ந்து நிற்கும் எழுத்துக்கள்
காரணமாக  அறுவகைப்படுதலின் அவற்றின் பெயரும் முறையும்
கூறுகின்றார்.
 

பொருள்:  குற்றியலுகரம்  வருமிடம்,  நெடில்   முதலாகிய  ஈரெழுத்
தொருமொழி,   உயிர்த்தொடர்மொழி,    இடையொற்றுத்   தொடர்மொழி,
ஆய்தத்   தொடர்மொழி,   வல்லொற்றுத்  தொடர்மொழி, மெல்லொற்றுத்
தொடர்மொழி ஆகிய ஆறேயாம்.
 

‘‘நெட்டெழுத்திம்பர்’’   என   மொழிமரபிற்   கூறினமையின்  ஈண்டு
வாளா    ஈரெழுத்தொருமொழி  என்றார்.  உயிர்த்தொடர்மொழி  என்றது
உயிர்மெய்யெழுத்தாய்க்  குறிலாயும் நெடிலாயும் தொடர்ந்த எழுத்துக்களை.
‘‘உயிர்மெய்    யீறும்   உயிரீற்    றியற்றே’’    என்றதனான்  அவற்றை
உயிர்த்தொடர்மொழி  என்றார்.  குற்றியலுகரம்  அதிகாரமாதலின்  வாளா
உகரம் என்றார். ஏகாரம் தேற்றம்.
 

குற்றியலுகரம்   என்னும்   பெயர்மாத்திரையானே  அதற்குரிய இயல்பு
பெறப்படும்.  ஆதலின்,  குறுகும்   என்றது  வரும் என்னும் பொருட்டாய்
நின்றது. அன்றேல்,  முற்றுகரமே இவற்றின் சார்பால் குறுகி  நிற்கும் எனப்
பொருள்  கொள்ளின் குற்றியலுகரம்  என்பது  முதலெழுத்தின்  விகாரமே
எனப்பட்டு மாறுகொளக் கூறலாய் முடியும் என்க.
 

எ - டு:  ஆறு,  பாகு, உல்கு,  குருகு, பலாசு,  எஃகு,  மூக்கு, கரும்பு
எனவரும்.  இவற்றை  இதழ்குவியாது  கூறியும்  இனிது, இனிமை  என்னும்
உயிர் முதன்மொழிகளைப் புணர்த்தும் கண்டுகொள்க,.
 

இவற்றைத்   தனிமொழியாக  வைத்து  இதழ் குவியாமல் ஒருமாத்திரை
யளவிற்கூறினும், உயிரல்லாத  ஏனைக்கணங்களொடு  புணர்த்துக்  கூறினும்
அதனியல்பு தெற்றெனப் புலப்படாதென்க.