|
சூ. 408 : | அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் | | எல்லா இறுதியும் உகரம் நிலையும் | (3) | க-து : | குற்றியலுகரம் நால்வகைச் சொற்கும் ஈறாகி இருவழியானும் புணரும் என்கின்றது. | பொருள்: அல்வழிப் புணர்ச்சியைக் கூறுமிடத்தும், வேற்றுமைப் புணர்ச்சியைக் கூறுமிடத்தும் பெயரும் தொழிலுமாக அடங்கிவரும் எல்லாச் சொற்களினிறுதியும் குற்றியலுகரம் நிலைபெற்றுப் புணரும். நிலையும் என்றது நின்று புணரும் என்றவாறு. | எ - டு: தேசு, முரசு, உல்கு, க ஃசு, கச்சு, நெஞ்சு என நிறுத்தி இனிது, இனிமை எனக்கூட்டி இருவழியும் பெயராக நின்று புணருமாறும், கூறென்றான், பருகென்றான், நோக்கென்றான், அஃகென்றான், நல்கென்றான், உண்டென்றான் எனத் தொழிற் சொல்லாக நின்று புணருமாறும் கண்டு கொள்க. ஏனைக் கணங்களையும் இவ்வாறே கொணர்ந்து கூட்டிக் கண்டு கொள்க. | சாத்தா! கூறு, நோக்கு என முன்னிலை ஏவலாக வருதற்கண் கூறு, நோக்கு என்பவை குற்றுகரமாகா. ஆண்டு அவை முற்றுகரங்கள் என்பது தொகைமரபினுள் கூறப்பட்டது. | இனி, இவற்றைத் தனிமொழியாகக் கூறுதற்கண் முற்றுகரமாயின் இதழ்குவித்தும் குற்றுகரமாயின் இதழ் குவியாதும் கூறிக் கொள்க. வரிவடிவின்கண் புள்ளியிட்டுக் குற்றியலுகரத்தை வேறுபடுத்திக் கண்டு கொள்க. வரிவடிவ அடையாளம் இன்றியமையாததென்பதை உணராமல் இடைக்காலத்தார் நெகிழவிட்டமையின் உரையாசிரியன்மாரும் ஆய்வாளரும் குழப்பத்திற்காளாயினர். ஒருசாரார் வரிவடிவைப் பிறைக்கோட்டினுள் எழுதிக்காட்டுவர். | இனி, இந்நூற்பாவின் கருத்துப் புணரியலுள் ‘‘அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும்’’ (புண-1) என்னும் சூத்திரத்துள் குற்றியலுகரமும் சேர்ந்து எண்ணப்பெற்றமையின் “வேற்றுமை குறித்த பொருள்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் பொருள்மொழி நிலையும்’’ என்றதனான் பெறப்படுமெனின்? பெறப்படாது. என்னை? ஆசிரியர், நிறுத்த சொல்லையும் குறித்து வருகிளவியையும் ஈறுபற்றி ஓதுங்கால் “உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்’’ ‘‘மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்’’ எனத் தனித்துவரல் மரபினையுடைய உயிரையும் மெய்யையுமே சுட்டிக் கூறினாராகலின் சார்ந்து வரல் மரபினதாகிய குற்றியலுகரம் ஆண்டு அடங்கிற்றில்லை என்க. |
மற்று ‘‘மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்’’ என்பதனொடு “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” என மாட்டெறிந்து கூறியதனான் இதனை மெய்யுள் அடக்கினார் எனக் கொள்ளலாமெனின்? ஆகாது. என்னை? ஆண்டு ஈற்றில் நிற்கும்மெய் வருமொழி உயிரேறிமுடியும் என்றும், அவ்வாறே குற்றியலுகரமும் உயிரேற இடங்கொடுக்கும் என்றும் அவ்இலக்கணம்பெற மாட்டெறிந்ததன்றிக் குற்றியலுகரம் மெய்யெழுத் தியல்பிற்று எனக்கூறாமையின் அடங்காதாயிற்று. எனவே, ற்றியலுகரஈற்றுச் சிறப்புப்புணர்ச்சி கூறும் இவ்வியலின்கண் அஃது இருவழியானும் புணரும் என்பதை விதித்தல் கடப்பாடாயிற்றென்க. | இனி இச்சூத்திரத்து, ‘‘நிலையும்’’ என்னும் பாடத்தை ‘‘நிறையும்’’ எனக்கொண்டு கூறுவார் உரையும் விளக்கமும் இந்நூல் நெறிக்கேலாமையைக், குற்றியலுகரம் பற்றிய எனது ஆய்வுக் கட்டுரையுள் கண்டுதெளிக. |
|