|
சூ. 409 : | வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் | | தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே | (4) | க-து : | ‘‘இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே’’ என மொழிமரபிற் கூறிய வண்ணம் குற்றியலுகரம் தனக்குரிய அரைமாத்திரையினும் குறுகி ஒலிக்கும் இடம் கூறுகின்றது. | பொருள்: வல்லொற்றுத் தொடர்ந்த குற்றியலுகரம் வருமொழி வல்லெழுத்து வந்து புணருமிடத்து ‘‘அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே’’ என்ற இலக்கணத்ததாய் நிலைபெறுதலும் உரித்தாகும். உம்மை எதிர்மறை. அதனான் தனக்குரிய அரைமாத்திரையளவினும் குறுகி நிற்றலும் உரித்தாம் என்றவாறு. | வரும் வல்லெழுத்து நிலைமொழிக்கண் உள்ள எழுத்தாகவே வரின், என்பது குறிப்பாக விளங்க ‘‘வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து’’ என்றார். பிற வல்லெழுத்து வரின் கூறுவோனது முயற்சிக்கேற்பக் குறுகியும், குறுகாதும் வரும் என்க. |
அரைமாத்திரையினும் குறுகி நிற்குமாறு: கொக்குக்குறிது, கச்சுச்சுருக்கம், பத்துத்துடி, செப்புப்புதிது எனவரும். இவற்றை விட்டிசையாது கூறி மாத்திரை குறைந்து நிற்றலை அறிக. கொக்குக்கடிது, கச்சுச்சிறிது என்பவை கூறுவோன் முயற்சியை ஒட்டிக் குறுகியும் நிற்கும்; குறுகாதும் நிற்கும். கொக்குச் சிறிது, கச்சுப் பெரிது என வரும் வல்லெழுத்துப் பிறிதாயின் குறுகாது. | குறுகல், நீளல், மிகுதல், திரிதல் என்பவை ஒலிபற்றிய இலக்கணமாதலின் இவற்றை வாயாற் சொல்லிச் செவிமடுத்தறிக. |
|