சூ. 410 :

யகரம் வருவழி இகரம் குறுகும்

உகரக் கிளவி துவரத் தோன்றாது  

(5)
 

க-து :

புணரியல்  நிலையிடைக்   குறுகலும்    உரித்தே (மொழிமரபு-2)
எனக்   கூறிய     வண்ணம்     குற்றியலிகரம்     தனக்குரிய
அரைமாத்திரையினும்   குறுகிவருமிடனும்   அதன்   காரணமும்
கூறுகின்றது.
 

பொருள்:  குறித்துவரு கிளவியின் முதலாக யகரம் வரும்வழி ஆண்டுக்
குற்றியலிகரம் வந்து  தனது அரைமாத்திரையினும் குறுகி  நிற்கும். அவ்வழி
நிறுத்த சொல்லின் ஈறாகிய குற்றியலுகர எழுத்தொலி முற்றாகத் தோன்றாது.
 

இகரம்   உகரம்  எனப்பட்டவை  குற்றியலிகரம், குற்றியலுகரம் என்பது
அதிகாரத்தாற் பெறப்பட்டது.
 

குற்றியலுகர   ஈற்றின்   முன்  யகரம்   வந்து  புணருங்கால் ஆண்டு
யகரத்தொடு ஒலி ஒற்றுமையுடைய குற்றியலிகரம் ஆசாக வருதலும், அஃது
அரைமாத்திரையே     உடைய   சார்பெழுத்தாகலின்   குற்றியலுகரத்தின்
மேல் ஏறி முடிதற்காகாமையும் நோக்கிக் குற்றியலுகரம் தான் ஊர்ந்து நின்ற
மெய்யை  நிறுத்தித் தன் ஓசை தோன்றாது  என்றார்.உகரம் கெடும் எனின்
மொழிப்பொருள்   திரியுமாதலின்,   ‘உகரக் கிளவி   துவரத்  தோன்றாது’
என்றார்.    கிளவி    என்றது   அவ்   எழுத்தொலியை.  குற்றியலிகரம்
யகரமெய்யைச்   சார்ந்தேவரும்   என்பதனை மியா   என்னும்   அசைச்
சொல்லானும்   அறிக.   மற்று, நாகு + யாது = நாகியாது   என  வந்துழி
நிலைமொழி குற்றியலுகர ஈற்றுச் சொல்லாகப் பொருள் தருமாறு யாங்ஙனம்
எனின்? நாய்- நாஇ என யகரப் புள்ளிக்கு இகரமும் மனம் - மனன்; அறம்
- அறன் என மகரப்புள்ளிக்கு னகரப் புள்ளியும்   பொருள்   சிதையாமல்
மாற்றெழுத்தாக வருமாறு போலக்  குற்றியலுகரம் யகரமெய்யொடு  புணரும்
புணர்மொழிக்கண்  குற்றியலிகரம் அதற்கு   மாற்றெழுத்தாக   வருமென்க.
இதனை முடிந்தது காட்டல் என்னும் உத்தியான் ஆசிரியர் கொள்ள வைத்த
சதுரப் பாட்டினையும் அறிந்துகொள்க.
 

இம்  மொழியியல்  நுண்மையைத் தேறாத பின்னூலோர் குற்றியலுகரமே
இகரமாகத்   திரியுமென்ப. அதன்  திரிபு  எனின்  அது குற்றியலுகரத்தின்
புணர்ச்சி விகாரமாவதல்லது   பிறிதொரு    சார்பெழுத்தாக    எண்ணுதற்
கேலாமையை     அவர்   எண்ணிலர்.  இனி,    உரையாளர்   யாவரும்
இச்சூத்திரத்திற்குக்    கூறிய     உரையும்   விளக்கமும் ஒவ்வாமையைச்
சார்பெழுத்து ஆய்வுக் கட்டுரையிற் கண்டுகொள்க.
 

மொழிமரபினுள்  “புணரியல்   நிலையிடைக்  குறுகலும் உரித்தே” என
எதிர்மறை   உம்மை   கொடுத்துவிட்டமையின்   ஈண்டு  வாளாகூறினார்.
அதனான்  குறுகாதும் நிற்கும்  என்பது  பெறப்படும். குறுகுமிடமும் குறுகா
இடமும் பொருள்   நோக்கி  உணர்தல்  வேண்டுமென்பது    அச்சூத்திர
உரையுள் விளக்கப்பட்டது.
 

எ - டு: ஆடு + யாது=ஆடியாது; கவடு + யாது = கவடியாது; தொண்டு
+ யாது = தொண்டியாது     எனவருபவை   குறுகும்.  தெள்கு  + யாது =
தெள்கியாது; வரகு + யாது = வரகியாது என வருபவை குறுகா.
 

இச்சூத்திரம்  “வல்லொற்றுத்  தொடர்மொழி”  என்னும்  சூத்திரத்திற்கு
முன்னர்  இருத்தல் வேண்டும். அதுவே  மொழிமரபினுள் நிறுத்த முறைக்கு
ஒத்ததாகும்.