சூ. 411 :

ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் 

வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத் 

தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி

(6)
 

க-து :
 

நெடிற்றொடர், உயிர்த்தொடர்க்  குற்றியலுகரங்கள்  வேற்றுமைப்
புணர்ச்சிக்கண் எய்தும் முறைமை கூறுகின்றது.
 

பொருள்:  ஈரெழுத்தொரு     மொழி,    உயிர்த்தொடர்    மொழிக்
குற்றுகரங்கள்   வேற்றுமைப்புணர்ச்சியாயின் குற்றுகரம்    ஊர்ந்து  நின்ற
வல்லெழுத்தே இனமாக மிக்கு இரட்டித்து நிற்க  வருமொழி  வல்லெழுத்து
மிக்குப் புணரும்.
 

வல்லெழுத்துமிகும்.   எனவே   ஏனைக்  கணங்கள்வரின்  இரட்டித்து
நிற்குமளவில் இயல்பாகப் புணரும் என்பது போதரும்.
 

எ - டு:  ஆறு+கரை = ஆற்றுக்கரை, செலவு,  தண்ணீர், புறம் எனவும்
கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில், செறிவு, திரி, புறம் எனவும்  இரட்டித்து
வல்லெழுத்து மிக்கன. யாடு + ஞாற்சி = யாட்டுஞாற்சி, நிணம்,  மணி, வால்
என   ஏனைக்கணங்கள்   இயல்பாயின. முயிறு, குறடு  முதலியவற்றொடும்
இவ்வாறே ஒட்டிக் கொள்க.
 

இரட்டுதல் பெரும்பான்மையும், றகரமும்    டகரமுமாம்.   சிறுபான்மை
எருத்துக்கால்-வெருக்குக்கண் எனத் தகரமும்   ககரமுமாம்.    “தோற்றம்”
என்றதனான் களிற்றியானை,     கரட்டுக்கானம்,   வெளிற்றுப்பனை  என
இருபெயரொட்டு அல்வழிக்கண் இரட்டுதல் கொள்க.