பொருள் : மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாமல் அக்குச் சாரியையொடும், பிறசாரியையொடும் வரும் வன்றொடர் மொழிக்குக் கிளையாகிய மென்றொடர் மொழிகளும் உளவெனக் கூறுவர் புலவர். ‘அக்கொடும்’ என்பதே பாடம் என்பது உரையாசிரியர் உரையான் பெறப்பட்டது. அகரச்சுட்டு மேலைச்சூத்திரத்து வல்லொற்றுத்தொடர் மொழியைச் சுட்டி நின்றது. கிளை என்றது மென்றொடர் மொழியை. |
எ - டு: மன்றப்பெண்ணை-குன்றக்கூகை என்பவை அக்குப்பெற்றன. கொங்கத்து வாழ்வு என்பது அத்துப் பெற்றது. மன்றம் - குன்றம் என்பவற்றுள், ‘அம்’ இடப்பொருள் விகுதியாம். அவை ஈறுகெட்டு மன்றத்திருந்தான், குன்றத்திருந்தான் எனவரின் அவை அத்துச்சாரியை பெற்றனவாம். |
“அக்கிளை மொழி” எனப் பொதுப்பட நின்றமையான், முரசக்கடிப்பு, அரசவாழ்வு என உயிர்த்தொடர் மொழி சிறுபான்மை அக்குப்பெறுதலும் கொள்க. கரியதன்கோடு, வெளியதன்கோடு என வினைக்குறிப்புப்பெயர் அன்சாரியை பெறுதலும் கொள்க. மென்றொடர் மொழி மன்றைப்பனை, ஓர்யாட்டையானை, பண்டைச்சான்றோர் என ஐகாரச் சாரியை பெறுதலும் கொள்க. |
‘அக்கொடும்’ என்னும் உம்மையை அதனொடு பிறவும் என்னும் பொருளதாக்கி, அக்கொடு அன் உடன் பெறுதலும் கொள்க. |
எ - டு: பார்ப்பனச்சேரி, தோட்டம் எனவரும். வடுகஅரசர், கடம்பமன்னர், வேடக்குறிச்சி எனப் பிறபெயர்களும் சிறுபான்மை அக்குப்பெறுமென்பார் உரையாளர். அவை வடுகருடைய அரசர், கடம்பருடைய மன்னர், வேடரது குறிச்சி என உடைமைப் பொருள்பட நிற்றலின் ஆறன் உருபின் குறையாகிய அகரம் பெற்றதெனல் நரிதென்க. |
கிளைமொழி என்றதனான் (உறவு) கிளைப்பெயர்களையே கொள்ள வேண்டுமென்பார் வேங்கடராசுலுரெட்டியார். ஆசிரியர் கருத்து அதுவாயின் கிளைமொழி என்னாது கிளைப்பெயர் என்றே ஓதியிருப்பார் என்க. |