எண்ணுப் பெயர்கள் பொருட்பெயர்களொடு புணருமாறு கூறுகின்றது. எண்ணுப் பெயர்கள், நெடிற்றொடர், வன்றொடர், மென்றொடர் ஆகிய மூவகையானும் வருதலின் அவை எல்லாம் கொள்க.
பொருள் :மூன்றீற்றுக் குற்றியலுகர எண்ணுப் பெயர்ச் சொற்கள பொருட்புணர்ச்சிக்கண் உருபுபுணர்ச்சிக்கு ஓதியாங்கு அன்சாரியை பெற்று நிற்கும்.
எ-டு: ஆறன்காயம், நூறன்காயம், எட்டன்காயம், ஒன்றன்காயம், ஐந்தன்காயம் எனவரும். சுக்கு, தோரை, பயறு, ஞாண், நூல், மணி, வட்டு, அடை, ஆடை என ஏனை எழுத்தொடும் கூட்டிக் கொள்க. ஆறன்காயம் = ஆறனாற் கொண்ட காயம் என வேற்றுமைப் பொருள்பட விரிக்க.