சூ. 42 :

ஐ ஒள என்னும் ஆயீ ரெழுத்திற்கு

இகர உகரம் இசைநிறை வாகும்

(9)
 

க-து:

ஐகார ஒளகாரங்கள் அளபெடுக்கும் முறைமை கூறுகின்றது.
 

பொருள்:  இனக்குற்றெழுத்தில்லாத   ஐகாரம்   ஒளகாரம்   என்னும்
அவ்இரண்டெழுத்திற்கு முறையே இகரமும் உகரமும் ஒத்த  குற்றெழுத்தாய்
இசைநிறைவு செய்யும்.
 

மேல்நூற்பாவில்     ஒத்த    குற்றெழுத்து   என    விதந்தமையான்
இனக்குற்றெழுத்தில்லாத   ஐகார   ஒளகாரங்களைப்பற்றி   எழும்   ஐயம்
நீங்க   இகர   உகரம் இசை நிறைவாகும் என்றார். அதனான் இவ்இரண்டு
உயிரெழுத்துக்களும் அகரத்திற்றொடங்கி முறையே   இகர   உகரங்களாகி
முடியும் விகார எழுத்துக்கள் என்பதை உய்த்துணரவைத்தார் என்க.
 

எ-டு:

ஐஇ-கைஇ எனவும் ஒளஉ - வௌஉ எனவும் வரும்.
 

‘‘குற்றியலிகரம்’’ என்பது முதலாக இதுவரை கூறப்பெற்ற இலக்கணங்கள்
எழுத்தொலியமைப்புப்  பற்றியனவே  எனினும்  இவ்ஓசை   வேறுபாடுகள்
மொழிக்கண்ணன்றிப்பெறப்படாமையின் நூன்மரபின் ஒழிபாக மொழிமரபின்
முதற்கண் வைத்தோதினார்.