சூ. 427 :

சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் 

யாவினா முதலிய மென்றொடர் மொழியும் 

ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை 

(22)
 

க-து :

மென்றொடர்    மொழிச் சுட்டு,  வினாக்களின் ஈறு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:   சுட்டெழுத்தின்     சினையாகிய    மாத்திரை    நீண்ட
மென்றொடர்ச் சுட்டுப் பெயர் சொல்லும், யா என்னும் வினாவை   முதலாக
உடைய மென்றொடர்  மொழியும்     வல்லெழுத்திலக்கணம்   மேற்கூறிய
அவ்வியல்பினின்று திரியா. என்றது; வல்லெழுத்து மிகும் என்றவாறு.
 

எ-டு: ஆங்குக்   கொண்டான்,    ஈங்குக்   கொண்டான்,   ஊங்குக் கொண்டான்; யாங்குக் கொண்டான்,  சென்றான்,   தந்தான்,   போயினான்
எனவரும். ஆண்டு, ஈண்டு, ஊண்டு, யாண்டு என்பனவற்றொடும் இவ்வாறே
ஒட்டுக.
  

“அல்லது கிளப்பின்” என்னும் சூத்திரத்தான் ‘இயற்கையாகும்’  என்றதனை
விலக்கி இடப்பெயர் உணர்த்தும் சுட்டுப்பெயர்  திரிந்து நின்றகாலை மிகும்
என உணர்த்தப்பட்டது.