சூ. 430 :

உண்டென் கிளவி உண்மை செப்பின்

          

முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும்

மேனிலை ஒற்றே ளகார மாதலும்

ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்தே 

(25)
 

க-து :
 

உண்டு என்னும் மென்றொடர் மொழியாகிய பண்புரிச்  சொல்
உண்மைத் தன்மையாகிய குறிப்புணர்த்தி வருங்கால் திரியுமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  உண்டென்னும்  பண்புரிச்சொல்  வினைக்குறிப்பு   முற்றாக
வாராமல், உளதாதல்  தன்மையை   உணர்த்தி   நிற்பின்,   வல்லெழுத்து
வருமிடத்து முதற்கண் இறுதியிலுள்ள குற்றியலுகரம் தான்  ஊர்ந்து நிற்கும்
டகரமெய்யொடு கெடுதலும், பின்னர் மேல் நின்ற ணகர ஒற்று   ளகரமாகத்
திரிதலும் என இவ்வாறு    ஆகும்   முறைமை   யிரண்டும்   உரிமையும்
உடையதாகும்.
 

உம்மை எதிர்மறை. அதனான்  அவ்  இரு திரிபுகளுமின்றி இயல்பாகப்
புணர்தலே பெரும்பான்மை என்றவாறு.
 

இச்சொல்   உள்   என்னும்  பண்படி  திரிந்து  ‘டு’  என்னும்  இறுதி
நிலையொடு   கூடியல்லது   தனித்து   நின்று  பொருளுணர்த்தாமையான்
இதனைக்  குற்றியலுகர ஈற்றுச் சொல்லாகவே வைத்து இலக்கணம் கூறினார்.
மற்று,  இஃது  ஏனைக்கணங்கள் வரின் திரியாமல் வல்லெழுத்து வருங்கால்
ஒரோவழி திரிதலைக் கண்டு   அத்திரிபினை   இலக்கண   முறைமையாற்
கூறினார் என்க.
 

எ-டு:  உள்களிறு,  உள்சுடர்,   உள்புலி   எனவரும்.   உம்மையான்
உண்டுகளிறு, உண்டுசுடர், உண்டுதெய்வம்,  உண்டுபுலி   எனவும்   வரும்.
தகரம் ளகரத்தொடு மயங்காமையின் எடுத்துக்காட்டின்று.
 

களிறு, சுடர், தெய்வம், புலி என்றது  அவற்றின்   தன்மைகளை என்க.
உண்மைத் தன்மை     எனினும்    பொருட்டன்மை  எனினும்   ஒக்கும்.
பொருட்டன்மையாவது      பொருள்   அழியினும்   தான்   அழிவின்றி
அப்பொருள்தொறும் நின்று உணர்த்தும் பெற்றிமையாகும்.
 

வல்லெழுத்ததிகாரம் மேலைச்   சூத்திரத்தான்   மாற்றப்பெற்றமையான்
வல்லெழுத்து வரூஉங்காலை  என்றார். அதனான்   பிறகணங்கள்   வரின்
திரியாது உண்டுஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அரிமா, ஆடு எனவரும்.
 

உள்பொருள் என்பது உளதாகிய பொருள்  என்னும்   கருத்தினதாயின்
உளதாதற்  குறிப்புணர்த்தும்   என்க.  இதன்   எதிர்மறை   இல்பொருள்
என்பதாகும்.அது லகர ஈற்றுள் கூறப்பட்டது.
 

இந்நூற்பாவிற்கு உரையாசிரியன்மார் கூறும்   கருத்து  முரண்பாடுகளை
விரிக்கின் பெருகும். மாணாக்கர் ஆய்ந்து தெளிக.