சூ. 432 : | திரிபுவேறு கிளப்பின் ஒற்றும் இறுதியும் |
| கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் |
| ஒற்று மெய்திரிந்து னகார மாகும் |
| தெற்கொடு புணருங் காலை யான |
(27) |
க-து: | பெருந்திசைகளொடு கோணத்திசை புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : திசைச் சொற்கள் தம்முட் புணருங்காலைத் திரிந்து வேறுபடுதலைச் சொல்லுமிடத்து ஒற்றும் குற்றியலுகரமாகிய இறுதியும் கெடுதல் வேண்டுமென்பர் புலவர். தெற்கு என்பதனொடு அத்திசைச் சொற்கள் புணருமிடத்து றகர ஒற்றாகிய மெய்யெழுத்துத் திரிந்து னகர ஒற்றாக நிற்கும். |
தெற்கொடு புணருங்காலை றகர ஒற்றுத் திரியுமெனவே, வடக்கொடு புணருமிடத்துக் ககர ஒற்றுக் கெடுமெனக் கொள்க. |
எ-டு : தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு எனவரும். |
வடக்கு என்னும் சொல்லின் ககர ஒற்றுக்குக் கேடு கூறாமையான் இத்திசையின் பெயர் ‘வடகு’ என ஆசிரியர் காலத்து வழங்கியிருத்தல் வேண்டுமென்பர் வேங்கடராசுலு ரெட்டியார். கிழக்கு, மேற்கு, குணக்கு, குடக்கு என்பவற்றை நோக்க வடக்கு என்பதே நேரிது என்பது புலப்படும். ககர ஒற்றுக்கேடு இலேசினாற்கோடற்கு இழுக்கில்லை என்க. |
இத்திசைச் சொற்கள் ஏனைப் பொருட் பெயரொடு புணருங்கால் எய்தும் திரிபு வேறுபாடுகளை உணர்த்தும் சூத்திரம் இருந்து கெட்டிருத்தல் வேண்டுமெனக் கருத வேண்டியுள்ளது. அவற்றை உரையிற்கோடல் என்னும் உத்தியாற் கொள்க. |
எ-டு: வடதிசை, வடகடல்; தென்திசை, தென்கடல்; குணதிசை, குணகடல்; குடதிசை, குடமலை எனவும், கீழ்கடல், கீழ்த்திசை, மேல்கடல், மேற்றிசை எனவும் சிறுபான்மை ஐகாரச் சாரியை பெற்று மேலைத்திசை, கீழைத்திசை எனவும் வரும். பிறவும் இவ்வாறு சான்றோர் வழக்காகி வருவனவற்றை ஓர்ந்தமைத்துக் கொள்க. |