சூ. 434 : | பத்தன் ஒற்றுக்கெட னகரம் இரட்டல் |
| ஒத்த தென்ப இரண்டு வருகாலை |
(29) |
க-து: | மேல்விலக்கிய இரண்டென்பதனொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: இரண்டென்னும் சொல் வந்து புணருமிடத்து ஈறுகெட்டு நின்ற பத்தென்பதன் தகர ஒற்றுக் கெட, னகர ஒற்றுத் தோன்றி இரட்டித்து நிற்றல் மரபு எனக் கூறுவர் புலவர். |
தகரம் னகரமாகத் திரிதற்கு இயைபின்மையான் னகரந் தோன்றுதலும் அஃது இரட்டித்தலும் மரபென்பார் ‘‘ஒத்ததென்ப’’ என்றார். |
எ-டு: பத்து + இரண்டு டி பன்+இரண்டு டி பன்னிரண்டு எனவரும். |
பத்து என்பதன் அடிப்படைக் குறையுரிச்சொல் ‘பல்’ என்பதாகும். லகரம் னகரமாயும் நிற்கும் அவ்வகையான் பன் என்பது உயிர்வர இரட்டித்துப் பன்னிரண்டு என ஆகும். இது சொற்பிறப்பாய்வுமுறை. ஆசிரியர் கூறியது தொல்லோர் இலக்கணமுறை என அறிக. |
ஆசிரியர் தொல்காப்பியனார் முந்துநூல்கண்டு முறைப்பட எண்ணி வழக்கும் செய்யுளுமாகிய அடிப்படையில் இலக்கணங் கூறுகின்றாராகலின் இன்னோரன்னவற்றிற்குக் கூறும் விதிகளை இலக்கண வழக்கென அறிந்துகொள்க. சாத்தந்தை - ஆந்தை, பூந்தை, தொண்ணூறு, தொள்ளாயிரம் முதலியவையெல்லாம் அவ்வாறு கூறப்பெற்றனவேயாகும். இன்னோரன்ன விதிகளைக் கொண்டு ஆசிரியர் சொற்பிறப்பியல்நெறி யறியாதவர் எனக் கருதற்க. அந்நெறியின்கண் ஆழங்காற்பட்டவர் என்பதை உரியியலான் உணர்க. |