பத்தென்பதனொடு நிறைப் பெயரும் அளவுப் பெயரும் புணருமாறு கூறுகின்றது.
பொருள்: பத்தென்னும் சொல்லின்முன் நிறைப்பெயரும், அளவுப் பெயரும் வந்து புணரின் இன்னென்னும் சாரியை குறையாது வரும்.
எ-டு:பதின்கழஞ்சு, பதின்றொடி, பலம் எனவும் பதின் கலம், தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும் பதிற்றகல், பதிற்றுழக்கு எனவும் வரும்.
‘‘குறையாது’ என்றதனான் பதின் திங்கள் எனப் பொருட் பெயரினும் சிறுபான்மை வருதல் கொள்க. இன்னும் இதனானே பதின்மர் எனவரும். இடைச்சொல் இன்பெறுதலும் பதிற்றுவேலி, பதிற்றியாண்டு என இன் இற்றாகத் திரிதலும் கொள்க.